சேலம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்களை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (29.12.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
வேளாண் திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு நிதியை முழுமையாக பயன்படுத்தும் வகையில் இனிவரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் மாநில மற்றும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் நிதி குறித்தும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளில் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் மீதமுள்ள நிதி இருப்பு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படைத் தன்மையுடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்றிட பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), வருவாய்த்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாக வரப்பெற்றுள்ள தகவலின்மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிரிடப்படும் விவரங்களை தெரிந்துகொள்ளும் வகையில் தற்போது செயல்பாட்டில் உள்ள அடங்கல் முறையினை மேம்படுத்தும் வகையில் எண்ம தொழில்நுட்பத்தில் உடனுக்குடன் பயிர் பரப்புகளை கணக்கிடும் பணி நடைபெறுகிறது. இப்பணியை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சேலம் மாவட்டத்தில் கால்நடை தீவனத் தொழிற்சாலைகள் அமைத்திட முன்வரும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தேவையான நிதியுதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. சேலம் மாவட்டத்தில் நவம்பர் 2023-ம் மாதம் முடிய 1,86,246.4 எக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு 28.12.2023 வரை 886.9 மி.மீ மழை பெய்துள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இக்கூட்டத்தில் மக்காசோளத்தில் ஏற்படும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மலர் சாகுபடியில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பூச்சி மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் துறை வல்லுநர்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக, சேலம் மாவட்டத்தில் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள விதை ஆய்வாளர்கள் மூலம் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளைக் கடைபிடிக்காமலும், தரக்குறைவான விதைகளை விற்பனை செய்த 203 விதை விற்பனை நிலையங்கள் மீது விதை விற்பனை தடை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைச்செல்வி மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.