மேட்டூர் அணையில் மூழ்கி நகராட்சி கவுன்சிலர் மகன் உயிரிழப்பு

Salem News Today: மேட்டூர் அணையில் மூழ்கி நகராட்சி கவுன்சிலர் மகன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-06-08 07:05 GMT

சதீஷ்குமார்.

Salem News Today: சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி 2வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளவர் இளங்கோ. மேட்டூர் குள்ளவீரன் பட்டியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 24), என்ஜினீயர். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்தார்.

இன்று தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நேர்முகத்தேர்வுக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த நிலையில், தன்னுடைய நண்பரான கொளத்தூரை அடுத்த அய்யம்புதூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான செல்வகுமார் (19) என்பவரை நேற்று சந்திக்க சென்றார்.

இருவரும் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் பூங்காவுக்கு சென்றனர். அங்கிருந்து மேட்டூர்- கொளத்தூர் இடையே உள்ள பாலிகடை பகுதிக்கு வந்தனர். அங்கு மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில் இருவரும் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாது. இருந்தாலும் உற்சாக மிகுதியால், அவர்களை அறியாமலேயே நீர்த்தேக்கத்தின் ஆழமான பகுதிக்கு இருவரும் சென்று விட்டனர். அப்போது அவர்கள் தண்ணீரில் தத்தளித்தனர்.

நீர்த்தேக்க பகுதியில் குளித்தவர்கள் சிலர், தண்ணீரில் தத்தளிக்கும் இவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இருவரையும் மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். இதில் செல்வகுமாரை மட்டும் உயிருடன் மீட்டனர். சதீஷ்குமார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அணையில் மூழ்கிய சதீஷ்குமார் உடலை மீனவர்கள் உதவியுடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். என்ஜினீயர் சதீஷ்குமார் உடலை பார்த்து கவுன்சிலர் இளங்கோ மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் சதீஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News