ஏற்காடு அரசு மருத்துவமனையில் நவீன பிரேத பரிசோதனைக் கட்டிடம்: அமைச்சர் திறப்பு

ஏற்காடு அரசு மருத்துவமனையில் நவீன பிரேத பரிசோதனைக் கட்டடத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

Update: 2024-01-22 13:07 GMT

சேலம் மாவட்டம், ஏற்காடு அரசு மருத்துவமனையில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பிரேத பரிசோதனைக் கட்டடத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (22.01.2024) திறந்து வைத்தார். 

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:

கடந்த ஓராண்டுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகளை திறந்து வைப்பதற்கு வருகைபுரிந்தபோது, ஏற்காடு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இம்மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை மையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாதது தெரிய வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து பரிசோதனை செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இப்பகுதி மக்களின் கோரிக்கையை எடுத்துச் சென்றவுடன் கடந்த நிதிநிலை அறிக்கையில் நவீன பிரேத பரிசோதனை மையம் அமைப்பதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து கொடுத்தார்கள். ஏற்காடு அரசு மருத்துவமனையில் நவீன பிரேத பரிசோதனை மையம் அமைப்பதன் மூலம் ஏற்காடு மற்றும் ஏற்காடு பகுதிகளைச் சுற்றியுள்ள மலைக் கிராம மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

அந்தவகையில், வரும் காலங்களில் பிரேத பரிசோதனை செய்வதற்காகும் கால தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், ஏற்காடு அரசு மருத்துவமனையில் 6 அறைகளுடன் கூடிய பிரேத குளிர்பதன கிடங்கு, பிரேத பரிசோதனை அறை, மருத்துவர் அறை, கருவிகள் கிடங்கு அறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பிரேத பரிசோதனைக் கட்டடம் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  அமைச்சர்  தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இணை இயக்குநர் நலப்பணிகள் (பொ) மரு.மு.வளர்மதி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.ச.சௌண்டம்மாள், மாநகர் நல அலுவலர் மரு.ந.யோகானந்த் உள்ளிட்ட தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News