சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணிகள் ரத்து

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 2,300 பணிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-25 05:29 GMT

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் 

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு வருவாயை வழங்கவும் அவர்கள் பட்டினியால் வாடுவதை தடுக்கவும் மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற பெண்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்ட மூலம் கிராமப்புறங்களில் பெண்கள், முதியோர், விவசாயிகள், விவசாயக் கூலிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.

கிராமப்புற சாலைகள் பராமரிப்பு, ஏரி குளங்கள் தூர் வாருதல், மண் சாலை அமைத்தல், தனிநபர் கழிப்பிடம் கட்டுதல், பசுமை வீடு, கல்வெட்டுகள் அமைத்தல், விவசாய நிலங்களுக்கு மண்கரை அமைத்தல், கல்கரை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு நிதி கோடிக்கணக்கில் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டம் கிராம ஊராட்சிகளுக்கு பேரு உதவியாக இருந்து வந்தது.

தற்போது இந்தத் திட்ட பணிகள் சேலம் மாவட்டத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் ரூ.100கோடி மதிப்பிலான 2,300 பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பயனாளிகள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ரத்து செய்யப்பட்ட பணிகளுக்கான மத்திய அரசு நிதி மீண்டும் மத்திய அரசுக்கு சென்று விடும். இந்த நிதி மீண்டும் பெற முடியாது. இந்த நிதி வேறு மாவட்டத்திற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ சென்று விடும் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளனர்.

பணிகள் ரத்து செய்யப்பட்டதால் சேலம் மாவட்டத்தில் இந்தத் திட்டமே நிறுத்தப்படுமா? என்ற அச்சத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப் பணிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது ஆளும் தரப்பிற்கு எதிராக திரும்பு வாய்ப்புள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News