மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக சரிவு

கர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது

Update: 2023-07-30 05:04 GMT

மேட்டூர் அணை - கோப்புப்படம் 

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 4 நாட்களாக பிலிகுண்டு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கன அடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து 18 ஆயிரத்து 58 கன அடியாக அதிகரித்தது.

தற்போது காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டுள்ளது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 839 கன அடியாக குறைந்தது. இன்று காலை மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. நீர் திறப்பை விட, நீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 65.53 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 65.63 அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் 29.06 டி.எம்.சி நீர் இருப்பு உளளது.

Tags:    

Similar News