மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை சோதனை
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.;
சேலத்தில் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான மின்சாதன பொருட்கள், ஒயர்கள் உள்ளிட்டவை தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில், ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இங்கு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற தனியார் நிறுவனம் வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்தது. தற்போது அனல் மின் நிலையத்தில் 850 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்நிறுவனம் முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றில் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விலை, தரம் பற்றி ஆய்வு நடந்து வருகிறது. அனல்மின் நிலையத்திற்கும், தனியார் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள், கோப்புகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.