மேச்சேரி சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி புதன்கிழமைசந்தையில் ஆடுகள் ரூ.3 கோடிக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-01-10 16:34 GMT

கோப்புப்படம் 

சேலம் மாவட்டம் மேச்சேரியில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் கூடும் ஆட்டுச் சந்தை பிரபலமானது.

மேச்சேரி ஆட்டு சந்தைக்கு மேச்சேரி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், ஓமலூர் கொளத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்தும் ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

இந்தப் பகுதிகளில் வளரும் ஆடுகள் வனப்பகுதிகளில் ஒட்டிய மேய்ச்சல் தரைகளில் மேய்ந்து வருவதால் இறைச்சி சுவையாக இருக்கும்.அதனால் மேச்சேரி சந்தை ஆடுகளை வாங்க பலர் வருகை தருவர்.

தை பொங்கல் பண்டிக்கைக்கு சில நாள்களே இருப்பதால் இன்று மேச்சேரி ஆட்டு சந்தைக்கு விவசாயிகள் பண்டிகை செலவினத்திற்காக ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ஆடுகள் வரத்து அதிகரித்தாலும் விலை சரியவில்லை. மாறாக கடந்த, வாரத்தை காட்டிலும் இன்று ஒரு ஆட்டிற்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை அதிகரித்து விலை போனது.

கடந்த வாரம் ரூ 8,000-க்கு விலை போன ஆடு இன்றுரூ.10,000 முதல் ரூ.12,000 வரை விற்பனையானது. பண்டிகை நெருங்கியுள்ளதால் ஆடுகளின் விலை மேலும் அதிகரிக்கும் என்று ஏராளமான முன்கூட்டியே ஆடுகளை வாங்க வந்து குவிந்தனர்.

ஆடுகள் விலை உயர்ந்த காரணத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வெள்ளாடுகளும் செம்மறி ஆடுகளும் சுமார் 3,000 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சுமார் 30 கிலோஎடை கொண்ட செம்மறி ஆடு ரூ.28,000 வரை விற்பனையானது. வெளியூர்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏராளமான ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிசென்றனர்.

இன்று மேச்சேரி ஆட்டுச் சந்தையில் காலை 8.30 மணிவரை ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags:    

Similar News