சேலம் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: 10.44 லட்சம் பேர் பயன்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 10.44 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.;
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் இப்பணிகளில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று (05.08.2024) மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பிருந்தாதேவி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தினை உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் பயன்பெறும்விதமாக 05.08.2021 அன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியில் நோயாளிகளுக்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை (Physiotheraphy Care), நோய் ஆதரவு சிகிச்சை (Pain and Palliative Care) ஆகிய மருத்துவ சேவைகளை களப்பணியாளர்கள் அளித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் மருத்துவ சேவை பெற்று நலமுடன் உள்ளனர். மேலும், மருத்துவ வசதி பெறாமல் இருப்பவர்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் ஆகிய அனைவருக்கும் நேரடியாக அவர்களுடைய வீட்டிற்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் சுகாதார கட்டமைப்பு மேலும் மேம்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 4-ஆம் ஆண்டில் இன்றைய தினம் அடி எடுத்து வைத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் 05.08.2021 அன்று தொடங்கியது முதல், உயர் இரத்த அழுத்த நோய் உள்ள 4,99,531 நபர்கள், நீரிழிவு நோய் உள்ள 2,38,721 நபர்கள், உயர் இரத்த அழுத்த நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ள 2,47,052 நபர்கள், நோய் ஆதரவு சிகிச்சை (Pain and Palliative) சேவை பெற்ற 22,328 நபர்கள், இயன்முறை (Physiotheraphy) சிகிச்சை சேவை பெற்ற 36,214 நபர்கள், சிறுநீரக நோய்யுக்கு 3 நபர்களுக்கு சுயடயாலிசிஸ் செய்வதற்கு தேவையான டயாலிசிஸ் பைகள் என மொத்தம் 10 இலட்சத்து 43 ஆயிரத்து 849 நபர்கள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மேற்கண்ட மருத்துவ சேவைகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஒவ்வொறு வட்டாரத்திற்கும் தலா ஒரு மருத்துவ வாகனம் வீதம் மொத்தம் 24 மருத்துவ வாகனங்கள் சேலம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்தமைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்றைய தினம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கிழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மக்களைத் தேடி மருத்துவ வாகனங்களின் பயன்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, இணை இயக்குநர் நலப்பணிகள் (பொ) ராதிகா, சுகாதாரபணிகளின் துணை இயக்குநர்கள் சவுண்டம்மாள், யோகானந்த், மாநகர் நல அலுவலர் மோகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.