சேலம் மாவட்டத்தில் 5ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
சேலம் மாவட்டத்தில் 5ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் 8 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.;
சேலம் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் 15வது நாளான 05.01.2024 அன்று 8 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது :
"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற முன்னெடுப்பின் நீட்சியாக, அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் "மக்களுடன் முதல்வர்" "இல்லம் தேடி சேவை" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீர்மிகு இத்திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சிறப்புடன் செயற்படுத்திட 18.12.2023 முதல் 06.01.2024 வரை 16 வேலை நாட்களில் 142 முகாம்களை நடத்த 142 உரிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, சீரிய முறையில் நடத்திட முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் (NODAL OFFICERS) மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் (INCHARGE OFFICERS) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் வழக்கமாக செயல்படும் இ-சேவை மையங்களில் பெறப்படும் சேவைக்கட்டணத்தில் 50% மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். இந்த முகாமானது முற்பகல் 10.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.00 மணி வரை செயல்படும். முகாமின் போது பெறப்படும் மனுக்களின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் 15வது நாளான 05.01.2024, வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை வார்டு 43 பகுதிக்குட்பட்டவர்களுக்கு தனசிவ திருமண
மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி வார்டு 59 பகுதிக்குட்பட்டவர்களுக்கு சந்திர மஹால் திருமண மண்டபத்திலும், மேட்டூர் நகராட்சி, மேட்டூர் வார்டு 5, 9, 10 ஆகிய பகுதிகளுக்குட்பட்டவர்களுக்கு சேலம் கேம்ப் செயின்ட் பிலோமினா நடுநிலைப்பள்ளியிலும், நரசிங்கபுரம் நகராட்சி, நரசிங்கபுரம் வார்டு 10, 14, 15 ஆகிய பகுதிகளுக்குட்பட்டவர்களுக்கு பாரதி சூப்பர் மார்க்கெட் எதிரில் உள்ள பிள்ளையார் கோவிலிலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
மேலும், நங்கவள்ளி பேரூராட்சிப் பகுதிக்குட்பட்டவர்களுக்கு நங்கவள்ளி எம்.என்.வி. திருமண மஹாலிலும், பூலாம்பட்டி பேரூராட்சிப் பகுதிக்குட்பட்டவர்களுக்கு கோவில்பாளையம் சமுதாயக் கூடத்திலும், தாசநாயக்கன்பட்டி கிராம ஊராட்சிப் பகுதிக்குட்பட்டவர்களுக்கு தாசநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும், நெய்க்காரப்பட்டி கிராம ஊராட்சிப் பகுதிக்குட்பட்டவர்களுக்கு சமத்துவபுரம் சமுதாயக் கூடத்திலும் என மொத்தம் 8 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் 142 இடங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, உரிய விளம்பரம் நகராட்சி நிருவாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையால் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாட்களை அறிந்து முகாமில் ஒருங்கிணைக்கப்படும் 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளைப் பெற்று பொதுமக்கள் பயனடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.