மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 530 இளைஞர்களுக்கு பணி ஆணைகள்
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 530 இளைஞர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் சேலம், சோனா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
இளைஞர்களுக்கு பெரிய தேடலாக இருக்கக்கூடிய வேலைவாய்ப்பை ஒருங்கிணைத்துக் கொடுக்க வேண்டும். குறிப்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு, அரசு துறை வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற வகையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு என்பது அரசுத்துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் பெருமளவில் பரவியிருப்பதால் வேலைநாடுநர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையிலே இணைப்பை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் இவ்வேலைவாய்ப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலை பெற்றவர்களும், வேலை தேடுபவர்களுக்கும் சிறப்பான வேலைவாய்ப்பை பெற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மனித வாழ்க்கையில் எதுவும் இறுதி இல்லை. தொடர்ந்து தேடலும், முயற்சியும் மிக முக்கியம்.
அதிகப்படியான பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பாக்ஸ்கான் நிறுவனம் பெரிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுபோல் பல்வேறு நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக அழைத்து வருகின்றார்கள். இதன் மூலம் பல்வேறு நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாடு ஒரு அமைதியான, சட்ட ஒழுங்கு மிக்க மாநிலம். எனவே அமைதியான மாநிலங்களிலே தொழில் தொடங்க தொழில் முனைவோர் அதிகம் விரும்புவார்கள்.
தமிழ்நாட்டில் பன்னாட்டு கார் நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. படித்து முடித்து வேலை தேடக்கூடிய இளைஞர்களுக்கு இது நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் ஒரு இணைப்பு முயற்சியாக இது அமைந்துள்ளது இளைஞர்கள் இதனை பயன்படுத்திகொள்ள வேண்டும். மேலும், அடுத்தப்படியாக எடப்பாடி மற்றும் ஆத்தூர் பகுதிகளில் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கூடுதலாக பல்வேறு நிறுவனங்கள் கொண்டு வர தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் இன்றைய தினம் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 3,870 க்கும் மேற்பட்ட இளைஞர்களும் 188 தனியார் தொழில் நிறுவனங்களும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி வாய்ப்பு பெற்ற 530 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், சேலம் மாநகராட்சி மேயர் இராமசந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) லதா, சோனா கல்விக் குழுமத் தலைவர் வள்ளிப்பா,, சோனா கல்விக் குழும துணைத்தலைவர் சொக்கு வள்ளிப்பா, துணை இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) மரு. செ. மணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.