சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி
Salem News Today - சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1,432 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
Salem News Today - சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 16.05.2023 முதல் 24.05.2023 வரை 1432-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில், சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1,432 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று 16.05.2023 முதல் 19.05.2023 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
அதன்படி, இன்றைய தினம் தேவூர் குறுவட்டத்திற்குட்பட்ட கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, அரசிராமணி, தேவூர், காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைக் பெற்றுக்கொண்டார்.
இந்த வருவாய் தீர்வாயத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 387 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன. வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது குறிப்பிட்ட கால அளவிற்குள் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இன்றைய தினம் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமத்தில் வசித்துவரும் திரு.பெ.லோகநாதன் என்பவர் முதியோர் ஓய்வூதியம் கோரி மனு அளித்ததைத் தொடர்ந்து, மாதம் ரூ.1,000/- ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை மற்றும் சேவூர் பேரூராட்சிப் பகுதியைச் சேர்ந்த மனுதாரருக்கு இறப்புச் சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரி வசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவை கருவிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த வருவாய் தீர்வாயத்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) சிங்காரம், உதவி இயக்குநர் (நில அளவை) இராஜசேகர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இரா.உமா மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் டி.ஜெ.ஜெனீபர் சோனியா ராணி, சங்ககிரி வருவாய் வட்டாட்சியர் கி.அறிவுடைநம்பி, வட்டாட்சியர்கள் லெனின், சீனிவாசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.