சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற அரசு உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற அரசு உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு, தலைவரும், எம்எல்ஏவுமான உதயசூரியன் தலைமையில், குழுவின் உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜூனன் (திண்டிவனம்), சின்னப்பா (அரியலூர்), செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), எஸ்.தங்கப்பாண்டியன் (இராஜபாளையம்), ஆ.மகாராஜன் (ஆண்டிப்பட்டி) ஆகியோர் இன்று (21.12.2022) சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2021-2023-ஆம் ஆண்டுகளுக்கான அரசு உறுதிமொழிக்குழு சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசு உறுதிமொழிகள் மீது தொடர்புடைய துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் மற்றும் நாளைய தினம் ஆய்வு மேற்கொள்கிறது.
அந்தவகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைக்கு புதியதாக ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், மேச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மேட்டூர் வட்டம், கோனூர் அருள்மிகு ஸ்ரீ சென்றாய் பெருமாள் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றுவரும் திருப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து நீர் வழங்கும் திட்டம் ரூ.565 கோடியில் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தனர். பின்னர், மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் ரூ.97.50 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, கீழ்மட்ட மதகு கதவு எண் 5-இல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், எரிசக்தித் துறையின் சார்பில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர்ந்த சாம்பல் வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்படவுள்ளதை ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் பிற்பகலில் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆய்வின்போது, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.