கந்துவட்டிக் கொடுமை.. கணவன் மனைவி தற்கொலை! கைது !
சேலத்தில் கந்து வட்டிக் கொடுமை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இருவரை கைது செய்துள்ளது காவல்துறை.;
சேலத்தில் கந்து வட்டிக் கொடுமை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இருவரை கைது செய்துள்ளது காவல்துறை.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை அடுத்த மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தொழில் தேவைக்காக ரெட்டியூரைச் சேர்ந்த ஒருவரிடம் 2 லட்சம் கடன் வட்டிக்கு வாங்கியிருக்கிறார் தங்கராஜ். தொழில் சரியாக செல்லாத காரணத்தால் வாங்கிய கடனுக்கு சரியாக வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் அடுத்த மாதம் என்று கூறி வாய்தா வாங்கிக் கொண்டிருந்த தங்கராஜை கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தான் வாங்கிய கடனுக்கு மகன்களிடமும் கேட்க முடியாத சூழ்நிலையில் தங்கராஜ் மனம் உடைந்துள்ளார். அடிக்கடி மிரட்டி வந்ததால் இனி வாழ்வதா முக்கியம் என விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கண் முன்னே கணவர் மரணமடைந்ததை அறிந்து துடிதுடித்த மனைவி விஜயா துக்கம் தாங்க முடியாமல் அதே மருத்துவமனையிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கிறார்.
இதுகுறித்து சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி, அவருக்கு கடன் பிரச்னை இருப்பதை கண்டறிந்தனர். ரெட்டியூரைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் 2 லட்சம், பூ வியாபாரி சித்ரா என்பவரிடம் 4 லட்சம் என பல லட்சக்கணக்கில் கடன் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
தங்கராஜ் தங்களுக்கென ஓம்பாலை பகுதியில் 60 லட்சம் மதிப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய பணத்தை திருப்பி தரமுடியாமல் தவித்தவருக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி அளிக்கவே இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.