சேலம் மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களைப் பழுதுபார்க்க அரசு நிதி உதவி
salem church list - சேலம் மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது.;
சேலம் மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
மேற்படி திட்டத்தின் கீழ், கூடுதல் பணிகளான தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pediestal in Churches), கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities) மற்றும் குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities) போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவாலய கட்டத்தின் வயதிற்கேற்ப 10-15 வருடம் இருப்பின் ரூ.1.00 இலட்சத்திலிருந்து 2.00 இலட்சமாகவும், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2.00 இலட்சத்திலிருந்து 4.00 இலட்சமாகவும், 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3.00 இலட்சத்திலிருந்து 6.00 இலட்சமாகவும் மானியத் தொகையினை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்.110) நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.