சேலத்தில் அரசு பொருட்காட்சி இன்று முதல் துவக்கம்
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை அமைச்சர்கள் இன்று தொடங்கி வைக்கின்றனர்.;
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மற்றும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்மு.பெ. சாமிநாதன் ஆகியோர் இன்று முற்பகல் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளனர்.
இவ்விழாவில் சேலம் மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சித்தலைவர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இப்பொருட்காட்சியில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 28 அரசுத்துறை அரங்குகளும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், சேலம் மாநகராட்சி உள்ளிட்ட 6 அரசு நிறுவனங்கள் என மொத்தம் 34 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வரங்குகளில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத் துறை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி இதில் இடம்பெறவுள்ளது. நாள்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி 09.08.2024 அன்று தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.