ஏற்காடு நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
Salem news today: ஏற்காட்டில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் ஏற்காடு நூலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.;
சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், நாகலூர் ஊராட்சி, முளுவி கிராமத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியர்ல, சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், நாகலூர் ஊராட்சி முளுவியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. இந்த நாகலூர் ஊராட்சி 4,036 மக்கள் தொகை கொண்டது. இம்மக்கள் சந்திப்பு முகாமில் நாகலூர், முளுவி, கரடியூர், இலவாடி, சொரக்காப்பட்டி, கொளகூர், வேப்பாடி, புளியம்பட்டி ஆகிய 8 மலைக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் மாவட்ட நிலையிலான அலுவலர்கள் இன்று காலை முதல் மேற்கண்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று, கள ஆய்வு மேற்கொண்டு அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் கலந்துரையாடி, அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தொடர்புடைய துறை அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாகலூர் ஊராட்சியில் ஏகலைவா உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இரண்டு துணை சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் கட்டுமான வசதிகளும், மருத்துவ வசதிகளும் போதுமான அளவில் உள்ளது. நாகலூர் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டடம் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் நவீன மையமாக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மலைவாழ் மக்கள் அரசால் வழங்கப்படுகின்ற கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், அரசு பணி நியமனங்களில் மலைவாழ் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அறிந்து அதற்காக விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியர்கள் அரசால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் ஏற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள நூலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் 01.03.2023 முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும், ஏற்காடு பகுதிகளில் வசிப்பவர்களின் புத்தக வாசிப்கை அதிகரிக்கும் நோக்கோடு நூலக நண்பர்கள் திட்டம் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டமாக 4 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நூலகங்களில் இருந்து நூல்களை எடுத்துச் சென்று பொதுமக்கள் படித்திடும் வகையில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, இன்றைய தினம் முழுவதும் அரசு அலுவலர்கள் நாகலூர் ஊராட்சியில் முகாமிடுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிராம மக்களுக்குச் சென்று சேர்கிறதா எனவும் அறிந்துகொண்டு மேலும் முனைப்புடன் பணியாற்ற இம்முகாம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பேருந்து வசதி, பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதனை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மலைவாழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மலைவாழ் மக்களுக்குக்கான சாதிச்சான்றிதழ் வேண்டும் எனில் அரசு இ- சேவை மையத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், தமிழ்நாடு அரசால் மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினையும் அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகளை மலைவாழ் மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற்றமடைய வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், சுகாதாரத் துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, ஊட்டச்சத்துப் பெட்டகம் உள்ளிட்ட உதவிகளை 113 பயனாளிகளுக்கு ரூ.9.65 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.