நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை பயன்படுத்திய மாஜி ஊராட்சி தலைவர்

மாஜி ஊராட்சி தலைவர் பெருமாள் நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தியதாக புகார்;

Update: 2025-03-26 07:00 GMT

சேலம் மாவட்டத்தின் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் நெல் கொள்முதல் மையத்தில் இருந்து நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பெருமாள் என்பவர் தனது சொந்த பெட்ரோல் பங்கிற்கு எடுத்துச் சென்று அங்கு தனிப்பட்ட முறையில் நெல் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சேலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். புகாரை அடுத்து நேற்று ஆத்தூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மேலாளர் ரவி தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிடங்கு மேலாளர் ரவி, "கொள்முதல் மைய நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை வெல்டிங் பழுது பார்ப்பதற்காக எடுத்துச் சென்றபோது, பெருமாள் என்பவரது பெட்ரோல் பங்கில் வைத்து நெல் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. புளியங்குறிச்சி கிடங்கு பொறுப்பாளர் தர்மன், காவலாளி பூவரசன் மற்றும் நெல் மூட்டை தூக்கும் 11 தொழிலாளர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு விளக்கம் பெறப்பட்டுள்ளது. முன்னாள் ஊராட்சி தலைவர் பெருமாளிடமும் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த விவகாரம் குறித்த முழுமையான விசாரணை அறிக்கையை சேலம் நுகர்பொருள் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம்" என்று குறிப்பிட்டார். மறுபுறம் இந்த புகார் குறித்து கேட்கப்பட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் பெருமாள், "நான் ஏழு ஆண்டுகளாக அரசின் வேளாண் துறைக்கு விதை நெல் வழங்கி வருகிறேன். அரசு கொள்முதல் கிடங்கில் நெல் பிரிக்கும் போது, என்னுடைய தரமான விதை நெல்லுடன் மற்ற நெல் கலந்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் வெல்டிங் பழுது பார்ப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி எனது விதை நெல்லை தரம் பிரித்து, அரசால் வழங்கப்பட்ட சாக்கு மூட்டைகளிலேயே நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளேன்" என விளக்கம் அளித்தார்.

Tags:    

Similar News