தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனைக்கு சீல்

எடப்பாடியில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2022-05-31 08:02 GMT

உயிரிழந்த பெண் சங்கீதா.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே சவுரியூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி மற்றும் மனைவி சங்கீதா( 28), இவர்களுக்கு 11 வயதான மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர்.

சங்கீதாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி, கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடியில் உள்ள அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து, சங்கீதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படவே மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றில் ரத்தம் கட்டி உள்ளதாகக்கூறி, மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இதனைத்தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கீதாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் 3வது முறையாக அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த சங்கீதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த மருத்துவமனையில் அடிக்கடி இது போன்று தவறான சிகிச்சையால் பலர் உயிரிழந்திருப்பதாகவும், இந்த மருத்துவமனை தொடர்ந்து இயங்க அனுமதிக்க கூடாது எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து எடப்பாடி வட்டாட்சியர்  லெனின், எடப்பாடி அரசு தலைமை மருத்துவர் செந்தில்குமரன் முன்னிலையில் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News