சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (30.06.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ ஆகும். ஜூன் மாதம் முடிய பெய்யவேண்டிய இயல்பான மழையளவு 251.9 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு 28.06.2023 வரை 279.2 மி.மீ மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 2023-24-ஆம் ஆண்டிற்கு நெல் 21,022 ஹெக்டர் பயிர் சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானியங்கள் 1,01,140 ஹெக்டர் பரப்பிற்கு சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயறு வகைகளுக்கு 56,900 ஹெக்டரும், உணவு தானியங்களுக்கு 1,79,062 ஹெக்டரும், எண்ணெய் வித்துக்களுக்கு 34,410 ஹெக்டரும் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டில் மே மாதம் முடிய 13,948.4 ஹெக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையால் விவசாயிகளுக்கு நடப்பு 2023-24-ஆம் ஆண்டில் நெல் 148 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள் 114.9 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 309 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 284 மெட்ரிக் டன்னும், பருத்தி 3 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இரசாயன உரங்களான யூரியா 22,246 மெட்ரிக் டன்னும், டிஏபி 14,896 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 12,355 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 18,650 டன்னும் என மொத்தம் 68,147 மெட்ரிக் டன் இரசாயன உரங்கள் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் யூரியா 5,171 மெட்ரிக் டன்னும், டிஏபி 6,678 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,572 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 18,080 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 31,501 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் உழவுப் பணி மானியத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு உழவுப் பணி மானியமாக ஏக்கருக்கு ரூ.250/- வீதம் 5 ஏக்கருக்கு ரூ.1,250/- பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அட்டவணைப் பிரிவிற்கு 1 முதல் 5 ஏக்கர் வரையிலான விவசாயிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின் மோட்டார் பொறுத்தி மின் இணைப்பு பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக புதியதாக மின் மோட்டார்கள் வழங்குவதற்கும், புதிய மின் மோட்டார்கள் பெறுவதற்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான அதிகபட்ச மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திருக்க வேண்டும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு கிராமத்திற்கு 2 எண்கள் வீதம் இலக்கு பெறப்பட்டு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.85 ஆயிரமும், இதர விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி அல்லது அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தினை நேரில் அணுகி பயன்பெறலாம்.
மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 400 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் செயல்படுத்தப்படும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10,000/- முதல் ரூ.50,000/- வரை காப்பீடு செய்ய 12,000 எண்ணிக்கையில் இலக்கு கோரப்பட்டுள்ளது.
நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 50 விழுக்காடு மானியத்தில் கிராமப்புற பயனாளிகளைக் கொண்டு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னை மற்றும் பழத் தோப்புகளில் ஊடுபயிராக தீவனப் பயிர்களை பயிரிட்டு தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ரூ.3,000/- மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0427 2451721 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.