மேட்டூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
Mettur Dam Today News in Tamil -மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Mettur Dam Today News in Tamil -சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காவேரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயப் பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து கடந்த 24.05.2022 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் (20.10.2022) மாலை 4.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக உள்ளது. தற்பொழுது அணையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 95,000 கன அடியாக வந்து கொண்டுள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து முழுமையாக 16 கண் மதகுகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் வழியாக உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருவதால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதோடு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்குப் போதுமான நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
மேலும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை, காவல் துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் இரவு, பகலாக தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்றைய (20.10.2022) தினம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அணையின் நீர்வரத்து, உபரிநீர் வெளியேற்றம், அணையின் நீர் இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை நீர்வளத்துறையினரிடம் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் கே.என்.நேரு கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, நீர்வளத்துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி, மேட்டூர் சார் ஆட்சியர் (பொ) எம்.ஜி.சரவணன், நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் (மேட்டூர் அணை) சிவக்குமார், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2