சேலம் அருகே வரும் 11ம் தேதி கல்விக் கடன் மேளா
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் வரும் 11ம் தேதி கல்விக் கடன் மேளா நடத்தப்படவுள்ளது.;
மாணவர்கள் கல்விக் கடன் பெற வரும் 11ம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், பூசாரிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஆர்.பி.சாரதி இண்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெறும் கல்விக் கடன் மேளாவில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகின்ற 1.09.2024 புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், பூசாரிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஆர்.பி.சாரதி இண்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் கல்விக் கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் 1.09.2024 அன்று நடைபெறவுள்ள கல்விக் கடன் மேளாவில் ஏற்கனவே கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக கல்விக் கடன் தேவைப்படுபவர்கள் நேரடியாக இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே வங்கிகளில் கல்விக் கடன் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும், புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டுபயன்பெறலாம்.
இம்முகாமில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படிப்பதற்கும், 12- ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலைக் கல்வி படித்துக் மாணவ, மாணவிகளும் கல்விக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிடப்பட்ட கல்விக் கடன்களைப் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச்சான்று நகல், வருமான சான்று நகல், கல்லூரி அடையாள அட்டை, வங்கிகணக்கு புத்தக நகல், கல்வி கட்டண விவரம், முதல் பட்டதாரி சான்றிதழ், வித்யாலஷ்மி, ஜன்சமார்த் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தால் அதன் விண்ணப்ப நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க ஏதுவாக கொண்டு வரவேண்டும்.
இக்கல்விக் கடன் மேளாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 44 வங்கிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் வழங்கும் கல்விக் கடன் விண்ணப்பத்தினை உடனடியாக பரிசீலித்து கடன் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்விக்கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தில் தொலைத்தூரங்களில் உள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் இதுபோன்ற கல்விக்கடன் மேளாவில் பங்கேற்று பயனடையும் வகையில் மகுடஞ்சாவடி, மேச்சேரி, ஓமலூர், பனமரத்துப்பட்டி, தாரமங்கலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் கல்விக்கடன் மேளா தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இதற்கான தேதிகள் விரைவில் தெரிவிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.