சேலத்தில் 730 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கல்
சேலத்தில் 730 மாணவ, மாணவிகளுக்கு ரூ.35.31 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.;
சேலம், சிறுமலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரிசிபாளையம்,புனித மரியனை அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று (01.08.2023) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து முதல்வர் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், தமிழ்நாட்டில் இன்று வழங்கப்படும் கல்வியின் தரம் மாணவர்களின் நாளைய வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 74 தொடக்கப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதேபோல், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து பயண அட்டைகள் மற்றும் மிதிவண்டிகள், பாடநூல்கள், புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப் பைகள் என கற்றலுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. இதனால் உயிர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2022- 2023-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற 8,852 மாணவர்களுக்கும், 13,127 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 21,979 மாணாக்கர்களுக்கு ரூ.10.59 கோடி மதிப்பீட்டில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் தொடக்கமாக இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரிசிபாளையம் புனித மரியனை அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற 404 மாணவர்கள் மற்றும் 326 மாணவிகளுக்கென மொத்தம் 730 மாணாக்கர்களுக்கு ரூ.35,31,360/- மதிப்பீட்டிலான இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் பேசுகையில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், சுற்றுச்சூழல், ஆசிரியர் - மாணவர் நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் முதல்வர் தனிகவனம் செலுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகள் அனைவரும் எவ்வித கவனச் சிதரல்களும் இல்லாமல் படிப்பில் தங்களது முழு கவனத்தினைச் செலுத்த வேண்டும். எனவே மாணவ, மாணவிகளாகிய நீங்கள் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாநகராட்சி மேயர் பேசினார்.
சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் பேசுகையில், தமிழக முதல்வர் ஆட்சிப்பொறுப்பேற்று, கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகள் உள்ள நிலையில் வேறு எந்தத் துறைக்கும் இல்லாத அளவில் 2023-2024- ஆம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ரூ.40,299 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்மூலம் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்த விளங்க வழிவகை செய்துள்ளார்.
இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலம் என்பதை உணர்ந்த முதல்வர் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கியுள்ளார்கள். குறிப்பாக, கோவிட் காலத்தில் பள்ளிக்குச் செல்லமுடியாத சூழ்நிலையில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்.
மேலும், அரசிற்கு பல்வேறு நிதிச்சுமைகள் இந்த போதிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள், பாட புத்தங்கள், சீருடை போன்ற பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு அன்போடு கேட்டுக்கொள்வது என்னவென்றால் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல கனவு காணுங்கள், எதிர்காலத்தில் நம் நாட்டை வழிநடத்தக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா. முருகன், வருவாய் வட்டாட்சியர் செம்மலை, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாதேஸ்வரன், 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன், சிறுமலர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செபஸ்தியான், புனித மரியனை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இருதயமேரி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.