எல்லைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கதர் ஆடை அணிவித்து ஆட்சியர் மரியாதை
எல்லைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கதர் ஆடை அணிவித்து சேலம் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.;
சுதந்திர தின விழாவினை முன்னிட்டு இன்று (15.08.2023) சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா 2023 சிறப்பாக நடைபெற்றது. இச்சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் காலை 09.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர், முதலாம் படைப்பிரிவு, இரண்டாம் படைப்பிரிவு, மூன்றாம் படைப்பிரிவு, சேலம் மாவட்ட ஊர் காவல்படை, காவல்துறையின் இசைக்குழு உள்ளிட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுதாரர்கள், எல்லைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கதர் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையைச் சேர்ந்த 94 காவலர்கள் உள்ளிட்ட 305 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இன்றைய தினம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். குறிப்பாக, டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய ஊழியரை துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய தனியார் பேருந்து ஓட்டுநர் கண்ணன் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் ஓட்டுநராக எவ்வித விபத்துக்களும் ஏற்படுத்தாமல் சிறப்பாகப் பணியாற்றி வரும் கனரக வாகன ஓட்டுநர் செல்வமணி ஆகியோருக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள்.
இவ்விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.0.86 இலட்சம் மதிப்பீட்டில் மழை தூவுவான் மற்றும் நிரந்திர கல் தூண் பந்தல், மகளிர் திட்டம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48 இலட்சம் கடனுதவியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.0.13 இலட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.0.84 இலட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.0.61 இலட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது.
மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் விலையில்லா வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய கால்நடை மேற்பார்வையாளருக்கு சிறந்த நடைமுறை விருதினையும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற 26 விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் என மொத்தம் 47 பயனாளிகளுக்கு ரூ.50,44,998/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்தும், சாலை பாதுகாப்பு, இயற்கையை பாதுகாத்தலின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு மையக் கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப் போரில் பங்குபெற்ற சேலம் மாவட்ட வீரர்களின் நினைவுச் சின்னத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல் மங்கை, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் எஸ்.இராஜேஸ்வரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சேலம் மாநகர காவல் துணை ஆணையர் கௌதம் கோயல், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், சேலம் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சுப்ரமணி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.