இயற்கையை பாதுகாக்க இளைய தலைமுறையினர் ஒன்றிணைய ஆட்சியர் வேண்டுகோள்
இயற்கையை பாதுகாக்க இளைய தலைமுறையினர் ஒன்றிணைய ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வனத்துறையின் சார்பில் "உலக ஈரநில தின விழா" மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (02.02.2024) நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:
இன்றைய தினம் சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வனத்துறையின் சார்பில் "உலக ஈரநில தின விழா" கொண்டாடப்படுகிறது. ஈரநிலம் என்பது சதுப்புநிலம் இயற்கையான நீர்நிலைகளாக அமைந்துள்ள பகுதி. ஆற்று வாய்க்கால்கள், நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்பாசன நோக்கங்களுக்காக பிரத்யேகமாக கட்டமைப்புகளை உருவாக்கப்பட்ட ஈரநிலங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
இந்த ஈரநிலங்களை முறைப்படுத்தி பாதுகாப்பதால் நிலத்தடி நீரின் அளவு அதிகரிப்பதுடன், பறவைகள், வன உயிரினங்கள் தாகத்தைப் போக்கவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் செழிக்கவும், உபயோகமாக இருக்கும் என்பதுடன் குடிநீர் தேவைகளை வெகுவாக பூர்த்தி செய்வதுடன் சூழலியல் மற்றும் உயிரியல் பரிணாமங்கள் பாதுகாக்கப்படுகிறது.
"ஈரநிலங்களும், மனித நல்வாழ்வும்", என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு 2024 உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இத்தருணத்தில் இன்றியமையாத சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கற்றுக் கொள்ளவும், நடவடிக்கை எடுக்கவும் ஊக்குவிக்கிறது. ஈரநிலங்கள் அறிதான உயிரினங்கள் முதல் மனித சமூகங்கள் வரை வாழ்க்கையை வளர்க்கின்றன. இளைய தலைமுறையினர் இந்த இயற்கை பொக்கிஷங்களை பாதுகாப்பதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மாணவ, மாணவிகள் பறவைகளைப் பற்றிப் படிப்பதும், ஈரநிலங்களைப் பற்றி படித்து ஆராய்ச்சி செய்வதும் போன்ற பல்வேறு படிப்புகள் உள்ளன. இதன்மூலம் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவிட வேண்டும். மேலும், நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஈர நிலத்தினைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு மாணவ, மாணவியரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, ஈரநிலங்கள் தினமாக உலகளவில் கொண்டாடிவரும் நிலையில் இந்தாண்டிற்கான கருப்பொருள் "ஈரநிலங்களும், மனித நல்வாழ்வும்" (Wetlands and human wellbeing) என்ற தலைப்பின்கீழ் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி, வன சரக அலுவலர், உதவி வனப் பாதுகாவலர் மரு.செல்வக்குமார், துரைமுருகன் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆகியோர் கலந்துகொண்டனர்.