நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு சமூக பங்களிப்பு வழங்க ஆட்சியர் வேண்டுகோள்

நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு சமூக பங்களிப்பு வழங்க சேலம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துத்துள்ளார்.

Update: 2023-03-24 05:11 GMT

நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி (NS-NOP) திட்டத்திற்காக சமூக பங்களிப்பு வழங்க சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர்  கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசால் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி (CSR) மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற. "நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி" (NS-NOP) என்ற பெயரில் தமிழக அரசால் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக திட்டப்பணிகளுக்கு நிதி அளிப்பது, பொருட்களாக வழங்குவது, தன்னார்வ சேவை புரிவது வாயிலாக அரசு பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை சமூக பங்களிப்புடன் நிறைவேற்றிட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சமூக பங்களிப்பு நிதியினை பெற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.12.2022 அன்று "நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி" (NS-NOP) என்ற https://nammaschool.tnschools.gov.in/#/ தனி இணையதளம் மற்றும் தனி வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக குறு, சிறு. பெரு நிறுவனங்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அளித்திட உறுதுணையாக உள்ளது. இணையதளம் வழியாக பெறப்படும் நிதியானது பள்ளிகளுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற இன்றியமையாத தேவைகளுக்கான செலவினம் மேற்கொள்ளப்பட்டு நன்கொடையாளருக்கு பயனீட்டு சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்கென தனிநபர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் குறு. சிறு, பெரு நிறுவனங்களின் சமூகபங்களிப்பு நிதி போன்றவை "நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி" (NS-NOP) இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும். இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் "நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி" (NS-NOP) என்ற பெயரில் வங்கி கணக்கு துவங்கவும் பள்ளிக் கல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியை மேற்குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்து நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தாராளமாக நிதியுதவி அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News