வந்தே பாரத் ரயில் இயக்கத்தில் நேர மாற்றம்
சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது
சென்னை- கோவை மற்றும் கோவை- சென்னை இடையே 14-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 8-ம் தேதி தொடங்கப்பட்டது, பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்களாக குறைந்துள்ளது. அதாவது சென்னையில் இருந்து கோவைக்கு 497 கி.மீ தூரத்தை 5.50 நிமிடங்களில் சென்றடைய முடிகிறது.
இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயணத்தின் போது, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் சேவை வழங்கப்படுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் எளிது. இதற்கு தனியாக செயலி எதுவும் தேவையில்லை. வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாகவே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டும் முன்பதிவு செய்யலாம்.
சென்னையில் இருந்து சேலம். ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் சேவையில் குறிப்பிட்ட பகுதியில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் இயக்க நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை சென்டிரல்- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20643) நாளை (திங்கட்கிழமை) முதல் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சேலத்திற்கு மாலை 5.58 மணிக்கு வந்து 6 மணிக்கு புறப்படும் நிலையில் நாளை முதல் 10 நிமிடத்திற்கு முன்பாக அதாவது மாலை 5.48 மணிக்கு வந்து 5.50 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.
இதேபோல் ஈரோட்டிற்கு மாலை 6.47 மணிக்கு வந்து 6.50 மணிக்கு புறப்பட்ட நிலையில் இனி மாலை 6.37 மணிக்கு வந்து 6.40 மணிக்கு புறப்படும்.
திருப்பூருக்கு இரவு 7.25 மணிக்கு வந்து 7.27 மணிக்கு புறப்பட்ட நிலையில் இனி இரவு 7.18 மணிக்கு வந்து 7.20 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
ஜோலார்பேட்டை- சேலம் மார்க்கத்தில் வந்தே பாரத் ரயிலின் இயக்க வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் 10 நிமிடத்திற்கு முன்பாக சேலம், ஈரோட்டிற்கு வந்து செல்லும்படி நேர மாற்றத்தை ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்துள்ளது.