மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

உடல் உறுப்புகளை தானம் செய்த சந்தோஷ்குமாருக்கு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அரசு மரியாதை வழங்கப்பட்டது.;

Update: 2024-05-07 12:13 GMT

மூளைச்சாவு அடைந்த இளைஞர் சந்தோஷ்குமார் 

சேலம் மாவட்டம் சங்ககிரி சந்தைப்பேட்டை பால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சந்தோஷ்குமார் (22) கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.

தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு சந்தோஷ்குமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உடனடியாக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், மருத்துவக் குழுவினர் மூளைச்சாவடைந்த சந்தோஷ்குமார் உடலில் இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் 2, சிறுகுடல், கார்னியா ஆகியவை எடுக்கப்பட்டது. இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கார்னியா சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சந்தோஷ்குமாருக்கு சேலம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News