ஆதரவற்ற மகளிர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கென அலுவல் சாரா உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கென அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்க தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதவரற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாரியத்திற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்களை அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளதால் தகுதிவாய்ந்த நபர்கள் உரிய விண்ணப்பத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அறை எண்.126இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்று உரிய ஆவணங்களுடன் 07.11.2022 அன்று மாலை 6.00 மணிக்குள் விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தினை 0427-2413213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (31.10.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 412 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களின் மீது, உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 21 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.