ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்
சேலத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;
சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (15.11.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கென தனிக்கவனம் செலுத்தி பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக சென்றடையும் நோக்கில் மாவட்டங்கள் தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்றைய தினம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தில் அவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டு வருகிறது. மேலும், அவர்களை கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறச் செய்து, இந்த சமூகத்தில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேர்வதும் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், தாட்கோ மூலமாக பள்ளிகள் மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல தொழில் வளர்ச்சியிலும் அவர்களை முன்னேறச் செய்வதற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் வங்கிக் கடனுதவிகள் வழங்குவதன் மூலம் எவ்வித இடர்பாடுகளுமின்றி கல்வியைத் தொடர்ந்து படித்து முடிக்க உதவியாக இருக்கும். அதேபோல, துறை அலுவலர்கள் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளைப் பராமரிப்பதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும், மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் நல சிறப்பு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, மக்களின் அன்றாட தேவைகளுக்குக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதால் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எளிதாக சென்று சேர ஒரு வாய்ப்பாக அமைகிறது. இவ்வாறு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு பைப் லைன் திட்டம், பழங்குடியினருக்கான தொழில்முனைவோர் திட்டம் மற்றும் முதியோர் உதவித்தொகை என 70 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தலைவர் (தாட்கோ ) மதிவாணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், ஆதிதிராவிடர் நலத்துறையின் இயக்குநர் ஆனந்த், மேலாண்மை இயக்குநர் (தாட்கோ ) கே.எஸ்.கந்தசாமி, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) எச்.எம். ஜெயராம், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா, சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம. ஸ்ரீ அபினவ், பழங்குடியினர் நலத்துறையின் இயக்குநர் அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாவட்ட பழங்குடியினர் நலத்துறையின் திட்ட அலுவலர் அன்பழகன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) மயில் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.