ஆத்தூர் அருகே கல்லூரி பேருந்து மோதி விபத்து: பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
Salem News Today: ஆத்தூர் அருகே கல்லூரி பேருந்து மோதியதில் பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.
Salem News Today: கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா சிறுப்பாக்கம் எஸ். புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வமணி. சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவருடைய மனைவி சத்யபிரியா அதே பகுதியில் தனியார் பள்ளயில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஆஸ்னவி (9) சன்மதி (1) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி சத்யபிரியா, ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலை அடுத்த வி. ராமநாதபுரம் கிராமத்திற்கு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு இரு மகள்களுடன் வந்துள்ளார். பின்னர் நேற்று காலை குழந்தைகளை விட்டு விட்டு பள்ளிக்கு செல்ல புளியங்குறிச்சி வழியாக சிறுப்பாகத்துக்கு டூவீலரில் சென்றுள்ளார். தலைவாசல்- வீரகனூர் சாலையில் புளியங்குறிச்சி பிரிவு ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த கல்லூரி பஸ், சத்யபிரியா சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் சத்யபிரியா தூக்கி வீசப்பட்டு தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்யபிரியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன், தலைவாசல் காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியால் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் சத்யபிரியா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயி தற்கொலை
கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி நரிப்பாடியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (54). விவசாயியான இவர் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சாமிக்கண்ணு, விவசாய தோட்டத்தில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
சேலம் சின்ன சீரகாபாடியை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 73). ஆயுள் தண்டனை கைதியான இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு சம்பவத்தன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிறைக்காவலர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.