ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதல்: 9 பேர் காயம்
Salem News Today: ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
Salem News Today: சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தை கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஓட்டுநர் செந்தில் (வயது 44) என்பவர் ஓட்டிச் சென்றார்.
வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரத்தில் இருந்து ஆத்தூரை அடுத்த சொக்கநாதபுரத்திற்கு செங்கற்கள் பாரம் ஏற்றிக் கொண்டு டிராக்டர் வந்துகொண்டிருந்தது. இந்த டிராக்டரை புதுப்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (44) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடி அருகே டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்தது.
இந்த விபத்தின் இடிபாடுகளில் சிக்கி டிராக்டர் டிரைவர் ராமச்சந்திரன், புதுப்பாளையத்தைச் சேர்ந்த கஸ்தூரி (38), பழனிசாமி (44), மாயவன் (33) ஆகியோர் காயமடைந்தனர்.
மேலும் பேருந்தில் வந்த சேலத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (40), ஆத்தூர் முல்லைவாடியைச் சேர்ந்த சுக்காயி (60), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த லட்சுமணன் (40), சேலம் ராஜசேகர் (65), நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (52) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து காயமடைந்த 9 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து டிராக்டர் மற்றும் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.