சேலம் மாவட்டத்தில் 400 சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்
Today Salem News in Tamil -சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் 400 சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது.
Today Salem News in Tamil -சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தலைமையில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் முன்னிலையில் இன்று (02.11.2022) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழக முதல்வர் கால்நடை பராமரிப்புத்துறைக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இம்முகாமின் மூலம் தொலைதூர அணுக முடியாத கிராமங்களில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்குதல் மற்றும் விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக சேலம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆண்டுக்கு 20 முகாம்கள் என்ற விகிதத்தில் 400 முகாம்கள் கால்நடை சேவைகள் கிடைக்க இயலாத தொலைதூர கிராமங்களில் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள தொலைதுார கிராமங்கள் பட்டியலிடப்படும். அதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தில் இடம்பெறும் கிராமங்களில் முகாம் நடத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு கால்நடைகளின் தொகை அடர்த்தி மற்றும் கால்நடை நிலையங்களின் தொலைதூரத்தின் அடிப்படையில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 கிராமங்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினைசரிபார்ப்பு, ஸ்கேன் செய்தல், சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கர்ப்பப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுதல் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் அறுவை சிகிச்சை சிறப்பு மகப்பேறியல் மருத்துவ உதவி தேவைப்படும் மற்றும் மலட்டுத்தன்மை உள்ள கால்நடைகள் அடையாளம் காணப்பட்டு பின்தொடர் சிகிச்சை அட்டை வழங்கப்படுகிறது.
மேலும், சிகிச்சையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த தேவையான கால்நடை உரிமையாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் பெறப்பட்டு முகாமிற்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களால் பின்தொடர் சிசிக்சை மேற்கொள்ளப்படும். மேலும், இம்முகாமில் கால்நடை வளர்ப்பு குறித்தும், தீவனப்பயிர் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இதுபோன்று நடத்தப்படும் முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, சிறந்த கால்நடை பராமரிப்பு செய்தவர்கள் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளின் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் பரிசுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.புருசோத்தமன், கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.சாந்தி, உதவி இயக்குநர்கள் மரு.ராஜா, மரு.பாபு மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2