சேலம் மாவட்டத்தில் ரூ.170.40 கோடி மதிப்பீட்டில் 355 சாலைப் பணிகள்

சேலம் மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 443.99 கி.மீ நீளமுள்ள 355 சாலைப் பணிகள் ரூ.170.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.;

Update: 2023-12-14 12:51 GMT

கருமந்துறையில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 443.99 கி.மீ நீளமுள்ள 355 சாலைப் பணிகள் ரூ.170.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதாக கருமந்துறையில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் கருமந்துறை தெற்குநாடு ஊராட்சியில் ஊரக ஊராட்சி ஒன்றியம், வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊரகப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. இத்திட்டம் அனைத்து வகையான சாலைகளையும் மேம்படுத்த வழிவகுக்கிறது. தார் இடப்படாத சாலைகளை தார் சாலைகளாகத் தரம் உயர்த்தவும், ஏற்கனவே உள்ள தார் சாலைகளை வலுப்படுத்தவும் மற்றும் பராமரிக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சாலைப் பணிகள் தெரிவு செய்யப்படும்போது குக்கிராமங்களை இணைக்கும் சாலைகள், பள்ளிகள், சந்தைகள் மற்றும் இதர வசதிகளை இணைக்கும் சாலைகள் போன்ற பல்வேறு கூறுகளின் அடிப்படையில் சாலைகள் முன்னுரிமை படுத்தப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுகின்றன. இத்திட்டத்திற்கான நிதி மாநில நிதிக்குழு மானிய நிதியிலிருந்து அளிக்கப்படுகிறது.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்துவதற்கு மண் சாலையை தார்சாலையாக மேம்படுத்துதல், பழுதடைந்த தார்சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் பழுதடைந்த தார்சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் என்று மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23-ஆம் ஆண்டு மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளில் சுமார் 443.99 கிலோ மீட்டர் நீளமுள்ள 355 சாலைப் பணிகள் ரூ.170.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரை 155.27 கி.மீ நீளமுள்ள 116 சாலைப் பணிகள் ரூ.42.60 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் 47.65 கி.மீ நீளமுள்ள 37 சாலைப் பணிகள் ரூ.20.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மேற்கண்ட அனைத்து பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு இவ்வாய்வின்போது அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டாட்சியர் மாணிக்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News