சேலம் மாவட்டத்தில் 10 மாதங்களில் 14.31 சதவீத சாலை விபத்துக்கள் குறைவு
சேலம் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 14.31 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது.
சாலை பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் சேலம் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 14.31 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், தலைமையில் இன்று (17.11.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
சாலை விபத்துக்களை முற்றிலும் குறைத்து விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிடும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் காவல்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் நடத்தப்பட்டு, கடந்த மாதம் நடைபெற்ற சாலை விபத்துக்களின் காரணங்கள் குறித்து ஆராய்ந்து எதிர்வரும் நாள்களில் சாலை விபத்து இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலை பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2023 வரை 10 மாதங்களில் 14.31 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. குறிப்பாக சாலை விபத்துக்களால் உயிரிழப்புகள் 15.36 சதவீதம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் இதனை மேலும் குறைத்திட வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிதல், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிதல், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கட்டாயமாக பின்பற்றுவதை உறுதி செய்திட வேண்டும்.
மேலும், தொடர் விபத்துக்கள் ஏற்படும் இடங்களுக்கு காவல்துறையுடன் போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய் துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து நேரடி ஆய்வு மேற்கொள்வதுடன் எதிர்வரும் காலங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகங்களின் முன்பகுதியில் நோயாளிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை முறையாக நிறுத்தி தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்ய வைக்கப்பட்டிருப்பதை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்துத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன், மாநகர காவல் துணை ஆணையர்கள் பிருந்தா, மதிவாணன் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.