மத்திய அரசின் குழந்தைகள் நல திட்டத்தின் கீழ், 14 சிறார்களுக்கு இருதய அறுவை சிகிச்சை
சேலத்தில் 14 குழந்தைகள் சென்னைக்கு பயணம், மத்திய அரசு நிதி மூலம் இலவச அறுவை சிகிச்சை;
சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய குழந்தைகள் நல திட்டத்தின் கீழ் 42 பள்ளி சிறார் மருத்துவக் குழுக்கள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 23ஆம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு, தொடக்கநிலை இடையீட்டு மையம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து இருதய மருத்துவ முகாம் நடத்தியது. இந்த முகாமில் 132 குழந்தைகளுக்கு இ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 14 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை தேவை என கண்டறியப்பட்டு, அவர்கள் தங்கள் பெற்றோருடன் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிறப்பு வாகனத்தில் அனுப்பப்பட்டனர். பெற்றோரின் விருப்பப்படி அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு ஆகிய அனைத்துச் செலவுகளுக்கும் மத்திய அரசு நிதி வழங்குகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.