சேலம் மாநகரில் 2 நாட்களில் 1300 டன் குப்பைகள்
ஆயுத பூஜை முடிவடைந்த நிலையில் சேலம் மாநகரில் 1300 டன் குப்பைகள் குவிந்தது
ஆயுத பூஜை விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வழிபாடு நடத்தினர். மேலும் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கும் மாலையிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினர்.
இதையொட்டி கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பூஜைக்கு தேவையான பழங்கள், காய்கறிகள், சுண்டல், பொரி, அவல், கடலை, சுண்டல், பூக்கள் விற்பனை அதிக அளவில் ந டந்தது. மேலும் வீடுகள், தொழில் நிறுவனங்களில் கட்டப்படும் வாழைக்கன்றுகள், வெண் பூசணிக்காய்களும் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
வாழைக்கன்றுகளை வீடுகள், நிறுவனங்களிலும் அதிக அளவில் கட்டியிருந்தனர். மேலும் மீதம் உள்ள வாழைக்கன்றுகள், சேதம் அடைந்த காய்கறிகள், பூக்களையும் வியாபாரிகள் சாலையோரம் விட்டு சென்றனர். இதனால் சந்தைகள் உள்பட பல பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன.
இதே போல திருஷ்டி சுற்றிய வெண் பூசணிக்காய்களையும் பொதுமக்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் போட்டு உடைத்தனர். மேலும் வீடுகளை சுத்தப்படுத்தி தேவையில்லாத பொருட்களையும் தெருக்களில் தூக்கி போட்டனர். இதனால் சேலம் மாநகரில் கடை வீதிகள், மார்க்கெட்கள், சாலையோர கடைகள், குடியிருப்புகள் என அனைத்து மண்டலங்களிலும் குப்பைகள் மலை போல தேங்கி குவிந்து கிடந்தன.
இந்த குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் வாகனங்க ளில் ஏற்றி அப்புறப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 1300 டன் குப்பைகள் மாநகரில் தேங்கி இருந்ததாகவும் தற்போது அந்த குப்பைகள் வேகமாக அகற்றப்பட்டு வருவதாகவும் இன்று மாலைக்குள் அனைத்து குப்பைகளும் அகற்றப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.