சேலத்தில் ரசாயனம் கலந்த 130 கிலோ மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
Salem News Today: சேலத்தில் ரசாயனம் கலந்த 130 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.;
Salem News Today: சேலம் மாநகரின் சூரமங்கலம் தர்மன் நகர் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தரமற்ற மீன்களை விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவலிங்கம், புஷ்பராஜ் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் மீன் மார்க்கெட்டில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த மார்க்கெட்டில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு கடையில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற ரசாயனம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் மார்க்கெட்டுக்கு வெளியே இருந்த மீன் கடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதிலும் ஒரு கடையில் ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 125 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், புகாரின் அடிப்படையில் மீன் கடைகளில் ஆய்வு நடத்தினோம். அப்போது 2 கடைகளில் இருந்து ரசாயனம் கலந்து விற்க வைத்திருந்த 130 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும் இதுதொடர்பாக அந்த கடையின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். இதுதவிர தரமற்ற மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்க கூடாது என்று கடைகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்து உள்ளோம் என தெரிவித்தனர்.