சேலம் மாவட்டத்திற்கு 1,242 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

சேலம் மாவட்டத்திற்கு ரூபாய் 1,242 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்

Update: 2021-12-11 17:03 GMT

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (11.12.2021) கலந்து கொண்டு உரையாற்றினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை:

பெரியோர்களே! தாய்மார்களே! மகளிர் சுய உதவிக்குழுவில் இடம்பெற்றிருக்கக்கூடிய அன்பிற்குரிய சகோதரிகளே! வெள்ளம் போல் திரண்டிருக்கக்கூடிய நண்பர்களே! தோழர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றி. நன்றி மட்டுமல்ல, அதோடு சேர்த்து வணக்கத்தையும் உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

சேலத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது என்ன அரசு விழாவா - அல்லது அரசாங்கமே விழாக்கோலம் கொண்டிருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு குறிப்பாக இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் நேரு அவர்கள் முன்நின்று அவருடைய மேற்பார்வையில், இங்கிருக்கக்கூடிய ஆட்சித் தலைவர். அரசு அலுவலர்கள் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். நேருவைப் பற்றி நான் பல நேரங்களில் அதிலும் குறிப்பாக திருச்சியிலே நடைபெறக்கூடிய அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், கழக நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் நான் அவரைப் பற்றிக் கூறுகிறபோது அவர், தீரர்கள் உருவாக்கிய ஒரு வீரராக, அந்தக் கோட்டத்தினுடைய தளபதியாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதிலே சாதாரண வெற்றியல்ல, மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெறக்கூடிய அளவிற்கு நேரு அவர்கள் அந்தக் காரியங்களை ஆற்றுவது உண்டு. அப்படி ஆற்றியிருக்கக்கூடிய அந்தப் பணி இப்போது இந்த சேலத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. சித்தர்கள் வாழ்ந்த கஞ்சமலை வள்ளல் பாரியின் மகளுக்கு அவ்வையார் திருமணம் செய்து வைத்து மகிழ்ச்சி அடைந்த உத்தமசோழபுரம் கோவில் - ஹைதர் அலியின் ஆளுகையில் இருந்த திருமணி முத்தாறு கோட்டை - என பல்வேறு வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய மாவட்டம்தான் இந்த சேலம் மாவட்டம். அதுமட்டுமல்ல, திராவிட இயக்கத்தில் என்ன சொல்லி அடையாளம் காட்டலாம் என்று சொன்னால், திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இந்த சேலம் ஒரு மிகப்பெரிய பங்கைப் பெற்றிருக்கிறது.

அது என்னவென்று கேட்டால், நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் அண்ணாதுரை தீர்மானம் என்ற தலைப்பிட்டு வந்த தீர்மானம், அதுதான் நீதிக்கட்சியானது. திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றதும் இந்த சேலம் மாநகரில்தான். இதையெல்லாம் தாண்டி இன்னொரு மகத்தான பெருமையும் இந்த சேலத்திற்கு உண்டு.

தமிழினத் தலைவர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் சில ஆண்டு காலம் வாழ்ந்த ஊர்தான் இந்த சேலம். 1949-50ஆம் ஆண்டுகளில் அந்த காலக்கட்டத்தில் சேலம் கோட்டைப் பகுதியில் ஹபீப் தெருவில்தான் தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் நான் என்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதுதான் எனக்குப் பெருமை.

அருமை அண்ணன் நம்முடைய நெஞ்சில் இன்றைக்கும் ஆழமாக பதிந்திருக்கக்கூடிய வீரபாண்டியார் அவர்கள். எத்தனையோ முறை வீரபாண்டியார் அவர்கள் இந்த சேலத்திற்கு கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, மாநாட்டில் பங்கேற்க, அதேபோல், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, துணை முதலமைச்சராக இருந்தபோது அரசு விழாக்களில் பங்கேற்க எத்தனையோ முறை என்னை அழைத்து வந்திருக்கிறார். ஆனால், இன்றைக்கு எல்லாவற்றையும் தாண்டி முதலமைச்சராக இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். எனக்கு என்ன ஏக்கம் என்றால், நான் முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில் நம் வீரபாண்டியார் இல்லையே என்கின்ற வருத்தம், ஏக்கம் என்னுடைய உள்ளத்தில் பதிந்திருக்கிறது. அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் அமைச்சராக இருந்தபோது, தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் முதலமைச்சர் என்கின்ற முறையோடு வாதாடிப் போராடி இந்த மாவட்டத்திற்கு எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். இன்னும் கூட நான் பெருமையாக சொல்லவேண்டுமென்றால், அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது எல்லா மாவட்டத்திற்கும் எல்லா பணிகளும் நடந்திருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் முன்நிறுத்தி அவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதில் எந்த மாவட்டம் அதிகமான சலுகையைப் பெற்றது என்றால், இந்த சேலம் மாவட்டம்தான் அதிகமான சலுகைகளைப் பெற்றிருக்கின்றது என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த சேலம் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டிய ஆட்சிதான் கடந்த காலங்களில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தபோது நடைபெற்றிருக்கிறது என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்! உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்,

* சேலம் உருக்காலை

* ஐம்பது ஆண்டுக்கால கனவாக இருந்த சேலம் ரயில்வே கோட்டம்

* பெரியார் பல்கலைக்கழகம் சேலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி

* ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி

* சேலம் மாநகராட்சிக்காக 283 கோடி ரூபாயில் காவிரி தனி கூட்டுக் குடிநீர் திட்டம் சேலம் மாநகரத்துக்கு 183 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம்

* சேலம் திருமணி முத்தாறு - வெள்ளக்குட்டை ஓடை தூய்மைப்படுத்த 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* சேலத்தில் 136 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் * 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா

* சேலம் மாவட்டத்தில் 9 உழவர் சந்தைகள் சேலம் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த்திட்டம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

* 150 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மற்றும் தாழ்வழுத்த புதை கம்பி தொடர் மின்பாதைகள்

* மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம் ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள்.

* சேலம் நகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

* சேலம் - கிருஷ்ணகிரி நான்கு வழிப்பாதையைப் போட வைத்தது

சேலம் - நாமக்கல் நான்கு வழிப்பாதையை ஏற்படுத்தியது

* சேலம் - செங்கப்பள்ளி நான்கு வழிப்பாதையை அமைத்தது பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமான சேவை திமுக ஆட்சியில்தான் மீண்டும் தொடங்கப்பட்டது.

இப்படி கணக்கில் அடங்காத வகையில் இந்த சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவந்து திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சிதான். அதற்கு எடுத்துக்காட்டுதான் இன்றைக்கு நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சி என்பதையும் நான் பெருமையோடு அடையாளப்படுத்த விரும்புகிறேன்.

மாமலை அளவு பணியானாலும் அதை சிறுகடுகாக நினைத்து, எல்லோரையும் ஒருங்கிணைத்து, திறம்படச் செய்துகாட்டும் வல்லமை நம்முடைய அமைச்சர் நேரு அவர்களுக்கு உண்டு. ஆகவேதான் அப்படிப்பட்ட ஒரு ஆற்றலாளரை தேர்ந்தெடுத்து உங்கள் மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக நாங்கள் நியமித்திருக்கிறோம். நேரு வந்தார் - நேரு வென்றார் என்று பெயர் எடுக்கப்போகிறார். நேருவுக்கு நிகர் நேருதான் என்று நான் பலமுறை பல நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன்.

இந்த ஒரு மாத காலத்தில் அவர் இந்த மாவட்டத்தில் செய்திருக்கின்ற பணிகளை அடுத்த ஓராண்டு காலத்துக்குத் தொடர்ந்தால், ஒரு மாதத்தில் ஆற்றியிருக்கக்கூடிய பணிக்கே இவ்வளவு பெரிய நிகழ்ச்சி, இன்னும் ஓராண்டுக்கு என்னென்ன செய்யப் போகிறார், என்னென்ன நிறைவேற்றப்படும் என்பதை நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அவரை பொறுப்பாளராக அறிவித்ததும், இந்த மாவட்டம் முழுக்க முழுக்க சுற்றிச் சுழன்று மக்கள் குறைகளைக் கேட்டு, மனுக்களைப் பெற்று, முகாம்களை நடத்தி, தலைவாசல், ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம், கெங்கவல்லி, வாழப்பாடி, ஏற்காடு, சேலம் தெற்கு, ஓமலூர், காடையாம்பட்டி, மேட்டூர் எடப்பாடி. சங்ககிரி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய பதினாறு வட்டங்களில் இருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து அவர் மனுக்களைப் பெற்றிருக்கிறார். அதாவது, 35 ஆயிரத்து 217 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த மனுக்களின் மூலமாக உங்களது கோரிக்கைகள் எல்லாம் எங்களிடம் வந்து சேர்ந்துள்ளன. இதில் 10 ஆயிரத்து 623 மனுக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற மனுக்கள் அரசுத் துறைகளின் மேல் விசாரணையில் உள்ளன. ஆய்வு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் உறுதியோடு சொல்கிறேன். அவற்றில் எதை எதை நிறைவேற்றப்பட முடியுமோ அத்தனையும் உறுதியாக, நிச்சயமாக நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதியை அரசின் சார்பில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இப்போது எங்கு சென்றாலும், எந்த வழியாகச் சென்றாலும், முதலமைச்சராக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, எங்கு சென்றாலும் மக்கள் எங்களுக்கு மகிழ்ச்சியோடு வரவேற்பு தருகிறார்கள். அவர்கள் முகத்தைப் பார்க்கும்போது, அவர்கள் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது, அவர்கள் புன்னகையைப் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு தெம்பு வருகிறது.

ஏற்கனவே ஒரு ஆட்சி நடந்தது. நான் அரசியலை அதிகம் பேச விரும்பவில்லை, பேசவும் தேவை இல்லை, அது எனக்கு அவசியமும் கிடையாது. எப்போது ஆட்சிக்கு வந்தோமோ, எப்போது நாம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறோம். பெரும்பான்மையாக வெற்றி பெற்றுவிட்டோம், நாம்தான் ஆட்சி என்ற நிலை வந்ததற்குப் பிறகு, அந்த வெற்றியை நம்முடைய கலைஞர் அவர்களுடைய நினைவிடத்திற்குச் சென்று நான் அங்கே வணங்கி அந்த வெற்றி பெற்ற செய்தியை நான் சொல்லச் சென்றபோது, பத்திரிகை நண்பர்கள் மக்களுக்கு என்ன செய்தியை சொல்கிறீர்கள் என்று என்னிடத்தில் கேட்டார்கள், ஒரே வரிதான் சொன்னேன். இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கு வாக்களிக்காத மக்களையும் கவரக்கூடிய வகையில் என்னுடைய பணி இருக்கும். அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த ஆட்சி என்று நான் சொன்னேன்.

அதனால்தான் கடந்த தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறவேண்டும், அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து 100 நாட்களில் அந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்கவேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதன் மூலமாக பெறப்பட்ட மனுக்களில் இதுவரைக்கும் 50 சதவீதத்திற்கும் மேலான மனுக்கள், அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கிறேன்.

அதனால்தான், தலைவர் அவர்களை நம்மை பயிற்றுவிக்கும்போது சொன்னார், 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' என்பது தலைவர் கலைஞருடைய வாசகம்.

இன்றைக்கு மட்டும் 261.39 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 38.52 கோடி ரூபாய் மதிப்பிலான 83 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 60 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அரசுத் துறைகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திற்கும் மேலாக 30 ஆயிரத்து 837 பேருக்கு நலத்திட்ட உதவிகள் தரப்பட இருக்கின்றன. 26 அரசுத் துறைகளின் சார்பாக 168.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 30 ஆயிரத்து 837 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர ஒரு மகிழ்ச்சியான விழாவாக நல்ல நிகழ்ச்சியாக இது நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்க்கை மேம்பாட்டையும் மனதில் வைத்துச் செயல்படும் அரசாக தமிழக அரசு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனிமனிதனின் வாழ்க்கை மேம்பாடுதான் - ஒரு மாவட்டத்தினுடைய வளர்ச்சி, இந்த சமூகத்தினுடைய வளர்ச்சி. அந்த வகையில் ஒவ்வொரு தனிமனிதனின் கவலையையும் தீர்ப்பதை எங்களது கடமையாக நாங்கள் கொண்டுள்ளோம்.

அதே போல் ஒட்டுமொத்தமாக இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம்.

இன்றைக்கு மட்டும் 1,242 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு நான் அறிவிக்கப் போகிறேன். அதில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

* சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் 530 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். * சுமார் 520 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதாளச் சாக்கடைகள் அமைக்கும் பணி செயல்படுத்தப்படும்.

* சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் கிடைக்கக்கூடிய வகையில் 158 கோடி ரூபாய் செலவில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சேலத்தில் உள்ள போடி நாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக 69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

* சேலம் அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைக்கப்படும். * சேலம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக 20 கோடி செலவில் ரூபாய் மாவட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்படும். * சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள் 20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

* தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா ஒன்று விரைவில் அமைய இருக்கிறது. * கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கக் கூடிய மாவட்டம் சேலம் மாவட்டம். நூற்றுக்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் உடனடியாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக பன்மாடி உற்பத்தி மையம் ஒன்று 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* இளைஞர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா ஒன்று விரைவில் அமைக்கப்படும்.

இந்த உறுதிமொழிகளை எல்லாம் முதற்கட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தொடக்கம்தான். இன்னும் பல திட்டங்கள் படிப்படியாக வர இருக்கின்றன.

நான் ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தி வருவது என்னவென்றால், சமச்சீரான வளர்ச்சி என்பதுதான். இந்தத் தொழில் - அந்தத் தொழில் என்ற எண்ணம் கிடையாது. இந்த மாவட்டம் - அந்த மாவட்டம் என்ற பாகுபாடோ கிடையாது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமச்சீர் வளர்ச்சி வரவேண்டுமென்றால், சம உரிமை கொடுக்கக்கூடிய வகையில் திட்டங்களை உருவாக்கித் தரவேண்டும். அந்த வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் இது போன்ற ஏராளமான திட்டப்பணிகளை தீட்டி நாங்கள் தொடங்கி வைத்துக்கொண்டிருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்னால் வறுமை குறைவான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சுட்டிக்காட்டியது.

பேரறிஞர் அண்ணாவும், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றப்பட்ட சமூகநலத் திட்டங்கள்தான் இதற்குக் காரணம். இது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் அந்தப் புள்ளிவிவரம் எனக்கு முழு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றுதான் நான் சொல்ல வேண்டும்.

வறுமையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பசி என்பதே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். வறுமையே இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. அத்தகைய சூழலை உருவாக்கத்தான் இந்த அரசு முழு முயற்சியோடு களத்தில் இறங்கி இருக்கிறது.

இன்னும் ஐந்தாண்டு காலத்திற்குள் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முதலிடம் என்கிற இலக்கை எட்டும். அதுதான் என்னுடைய இலக்கு. அதற்காகத்தான் நான் நாள் பார்க்கவில்லை, நேரம் பார்க்கவில்லை, உழைத்துக் கொண்டே இருக்கிறேன்.

கலைஞர் அவர்கள் என்னைப்பற்றி அடிக்கடி சொல்கிறபோது, அவர் பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். 'ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று. அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நான் நித்தமும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

முதலில் கொரோனாவை விரட்டினோம் ! அதனை வென்றோம்! பிறகு மழை வந்தது. வெள்ளம் வந்தது, அந்தத் துயரத்தையும் துடைத்திருக்கிறோம்!

எத்தகைய சோதனைகளையும் வென்று சாதனை படைக்கக்கூடிய நெஞ்சுறுதியை மக்களாகிய நீங்கள் தான் எங்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் !

ஏழை எளிய தாய்மார்கள். என்னைப் பார்த்து மகிழ்ச்சியோடு வணங்கி வாழ்த்தும்போது உலகத்தின் மிகச்சிறந்த விருதைப் பெற்றது போல நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

'ரெண்டு நாளா தண்ணீர் தேங்கி நின்றது. குறிப்பாக சென்னை மற்றும் பல மாவட்டங்களில். அதிகாரிகள் எல்லாம் வந்து வேலை பார்த்து சரிசெய்து விட்டார்கள்' என்று மக்கள் சொல்கிறார்களே, அதுதான் எனக்குப் பெருமை. மூன்று நாட்களுக்கு முன்னால் கோவையில் இருந்தேன்! நேற்றைய தினம் சென்னையில் இருந்தேன்! இன்று சேலம் வந்து இருக்கிறேன்! நாளைக்கு மறுபடியும் சென்னை செல்கிறேன்!

இந்தப் பொறுப்பு இருக்கின்ற வரையில் நிச்சயமாக, உறுதியாக சொல்கிறேன் ஏதோ மூன்று முறை, ஐந்து முறை, ஆறு முறை வந்துவிட்டேன் என்று சொன்னார்கள், அது போதாது. திட்டத்தை துவக்கி வைத்துவிட்டு, இந்த நிகழ்ச்சி இதோடு முடிந்துவிட்டது என்று நான் அமைதியாக இருந்துவிட மாட்டேன். பணிகள் நடந்து கொண்டிருக்கின்றபோது மீண்டும் மீண்டும் நான் வருவேன். அதை முடிக்கும் வரை வந்துகொண்டே இருப்பேன், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், ஓய்வை நான் என்றைக்கும் விரும்பியது கிடையாது. கலைஞர் சொன்னதுபோல உழைப்பு, உழைப்பு, உழைப்பு. உங்களுக்காக தொடர்ந்து உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News