அரவை கொப்பரை கிலோவுக்கு ரூ.108.60.. கொள்முதலுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்ய விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-03-20 13:36 GMT

பைல் படம்.

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்ய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைத்திடவும், அவர்களின் வருவாயினை பெருக்கிடவும், தமிழக அரசு பல்வேறு உழவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில், தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த அரவை கொப்பரையினை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை (National Agricultural Co-operative Marketing Federation) இணையத்தின் மூலம், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொப்பரை என்ற வீதத்தில், குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சேலம் மாவட்டத்தில் 300 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தில் சேலம், மேச்சேரி மற்றும் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்படவுள்ளது.

இம்மையங்களில் அரவை கொப்பரை குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 வீதம் 2023-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள அரவை கொப்பரை அயல்பொருட்கள் 1 சதவீதமும், பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீத எண்ணிக்கையிலும், சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீத எண்ணிக்கையிலும், சில்லுகள் 10 சதவீத அடிப்படையிலும், ஈரப்பதம் 6 சதவீத அடிப்படையிலும் நியாயமான சராசரி தரத்தினை (Fair Average Quality) கொண்டிருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் எண், மற்றும் வங்கி கணக்கு எண்ஆகிய விவரங்களுடன் சேலம் (கைபேசி எண்: 91593 56156), மேச்சேரி (கைபேசி எண்: 73732 72950) மற்றும் வாழப்பாடி (கைபேசி எண்: 98947 76675, 90803 23535) ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே, தென்னை சாகுபடி செய்துள்ள சேலம் மாவட்ட அனைத்து விவசாயிகளும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விளைபொருளுக்கு அதிக விலைபெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு முதுநிலை செயலாளர் / வேளாண்மை துணை இயக்குநர், சேலம் விற்பனைக்குழு, சேலம் (0427-2906927 மற்றும் கைபேசி எண்: 93642 02355) அவர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News