தமிழகம் முழுவதும் இன்று ஊரகப் பகுதி மாணவர் (TRUST) திறனாய்வுத் தேர்வு

இந்தத்தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்

Update: 2022-02-27 05:30 GMT

புதுக்கோட்டையில் நடந்த ஊரக மாணவர் திறனாய்வு தேர்வு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் (TRUST Examination) திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெறுகிறது

தமிழகத்தில், கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 1991ம் ஆண்டு முதல்,அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு நடைபெற்று வருகிறது.

கிராமப்புற அரசு பள்ளிகளில், 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில், மாவட்டத்துக்கு, 50 மாணவர்கள், 50 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிளஸ் 2 முடிக்கும் வரை, நான்கு ஆண்டுகளுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதி: இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021 - 2022 -ஆம் கல்வியாண்டில் 9 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராவர்.

ஆண்டு வருமானம் : இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ , 1,00,000 / - க்கு ( ரூபாய் ஒரு இலட்சத்திற்கு ) மிகாமல் இருத்தல் வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(27.2.2022) அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, கீரனூர், புதுக்கோட்டை உள்பட மொத்தம் 18 மையங்களில் நடைபெறும் ஊரகத்திறனாய்வு தேர்வில் மாணவ, மாணவிகள் 2700 பேர் எழுதுகின்றனர்.

தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் சென்று செய்தனர். இந்தத்தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

உதவித்தொகை அதிகரிக்க வேண்டும்: கடந்த, 25 ஆண்டுகளாக, இந்த உதவித்தொகை அதிகரிக்கப்படாததால் இத்தேர்வில் பங்கேற்கும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்து வருகிறது.

இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது: கடந்த, 1991ம் ஆண்டில், 1,000 ரூபாய் என்பது, அம்மாணவனின் கல்விக்கு மட்டுமின்றி, குடும்பத்துக்கும் உதவும் வகையில் இருந்தது. அப்போது, இத்தேர்வில் பங்கேற்க, குடும்ப ஆண்டு வருமானம், 15 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டு, தற்போது, ஒரு லட்சம் ரூபாய்வரை, குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்க முடியும். அதேநேரம், உதவித்தொகையின் அளவு மட்டும், 25 ஆண்டுகளாகியும் சிறிதும் உயர்த்தப்படவில்லை.அதிகரிக்க வேண்டும். அப்படி செய்தால் , மாணவ, மாணவியரிடையே இத்தேர்வுக்கு தயாராகும் ஆர்வம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உதவித்தொகையின் அளவை அதிகரிக்கும் போது, அவை கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்துவதுடன், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மனப்பாங்கையும் அதிகப்படுத்தும். எனவே, தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News