ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.946 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ற்கான ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ற்கான ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்களை உருவாக்க ரூ.946.92 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் தொள்ளாயிரத்து 46 கோடியே 92 லட்சம் மதிப்பில் (வரிகள் உட்பட), 2022 நவம்பர் 17-ஆம் தேதி சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோஸ் தலைமை அலுவலகத்தில் கையெழுத்திட்டு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மு.அ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ்ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ இரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்ததின் கீழ் முதல் மெட்ரோ இரயில் 2024-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் நவம்பர் 2024 முதல் ஆகஸ்ட் 2025 வரை ஒரு வருடத்திற்குள் ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டிமற்றும்இயக்கம்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
சென்னை மெட்ரோ ரயில்- II திட்டப்பணிகள்: தமிழ்நாடு அரசின் நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், உயர்த்தப்பட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக 7 ஒப்பந்தங்களும், சுரங்கப்பாதை வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக 10 ஒப்பந்தங்களும், மாதவரம், பூந்தமல்லி பணிமனைக்களுக்காக 2 ஒப்பந்தங்களும் மற்றும் இருப்புப்பாதை அமைப்பதற்கான 5 ஒப்பந்தங்களும், என மொத்தம் 24 ஒப்பந்தங்கள் அடங்கும். 24 கட்டுமான ஒப்பந்தங்களில், இதுவரை 15 ஒப்பந்தங்களுக்கு ஏற்பு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதை தவிர அமைப்புகளை நிறுவுவதற்கான (System Contacts) 36 ஒப்பந்தங்களில் இதுவரை 2 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. வழித்தடம் 3 இல் மாதவரத்திலிருந்து தரமணி வரையிலான (26.7 கி.மீ) சுரங்கப்பாதை வழித்தடப்பகுதி தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாதவரம் பால் பண்ணையிலிருந்து கெல்லீஸ் வரையில் 9 கி.மீ நீளத்திற்கு சுரங்கப்பாதை தோண்டும் பணி மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான தடுப்பு சுற்று சுவர்கள் (Diaphragm Wall) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான சுற்றுத் தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் சுரங்கப்பாதைக்கான கான்கீரிட் வார்ப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் பால்பண்ணையிலிருந்து சுரங்கம் தோண்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.