பரம்பரை மருத்துவர்களுக்கு ரூ.3000 ஓய்வூதிய ஆணைகள்: முதல்வர் வழங்கல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வு ஊதிய ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கினார்.
தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000/- மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000/- ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (22.9.2022), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000/- மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000/-ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை வழங்கிடும் அடையாளமாக 11 ஓய்வுபெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கினார்.
தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினை களைய உதவும் வகையில் மாதம் ரூ.500/ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஓய்வூதியமானது டிசம்பர் 2011ஆம் ஆண்டு ரூ.1000/- ஆக உயர்த்தப்பட்டது.
தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000/தங்களின் குறைந்தபட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவே தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ.1,000/-லிருந்து ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்கிட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் அடிப்படையில், 2022-23ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1000/- ஓய்வூதியம், நடப்பு ஆண்டு முதல் ரூ.3000/ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.3000/-க்கான ஆணைகளை பரம்பரை மருத்துவர்களுக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ். கணேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள மேயர் பிரியா, குன்றத்தூர் நகராட்சித் தலைவர் கே.சத்தியமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிகுப்பம் பேரூராட்சி தலைவர்கே.தமிழரசி ஆகியோர் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றனர்.
சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில் 'உங்கள் துறையில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். மேலும் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மரக்கன்றினை நட்டு வைத்தார்.