மதுரையில் தமிழக முதல்வர் தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம்
சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை உயர் அலுவலர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து 1.2.2023 மற்றும் 2.2.2023 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்திற்கும், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக 15.2.2023 மற்றும் 16.2.2023 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தொழிற் சங்கங்கள் சிறு மற்றும் குறுந்தொழிற் சங்கங்கள் விவசாய சங்கங்கள் மீனவர் சங்கங்கள் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மதுரை இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் பேசுகையில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டங்களில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை தென்மாவட்டங்களில், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பது மிக மிக முக்கியமான பணியாகும். தென்மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை உயர் அலுவலர்களாகிய நீங்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி சட்டம் ஒழுங்கினை சீராக பராமரிக்கவேண்டும்.
காவல்துறை அலுவலர்கள் தடுப்புப் பணிகள், ரோந்து பணிகள் ஆகிய அடிப்படைக் காவல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அதேபோல் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அதனை குறைக்க முடியும் என்பதையும் உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களுக்கு காரணமானவர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது உங்கள் கடமை. இவ்வகை குற்றங்களில் பெரும்பாலும் ஏமாற்றப்படுவது எளிய, நடுத்தர வர்க்க மக்கள் தான். ஆகவே, தொழில்நுட்ப பிரிவுகளின் திறனைக் கூர்மைப்படுத்தி இதனை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
அடுத்தபடியாக, சமூக ஊடகங்கள் மூலமாக சாதி மோதல்களைத் தூண்டும் வகையில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அத்தகைய எண்ணங்களைத் தூண்டும் வகையில் செயல்படும் நபர்களையும் வாட்ஸ்ஆப் குழுக்களையும் கண்காணித்து உடனுக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எந்தக் காரணம் கொண்டும் உங்கள் பகுதிக்குள் சாதி ரீதியான உரசல்களோ, பிரச்சனைகளோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும்.
அவ்வாறு செய்யவேண்டுமானால் அதற்கு உங்களிடம் களநிலவரம் முழுமையாகக் கையில் இருக்கவேண்டும். தொடர்ந்து கள ஆய்வில் ஈடுபட்டு காவல்நிலையங்களை திடீர் தணிக்கை செய்து சார்நிலை அலுவலர்களின் பணியினை தொடர்ந்து கவனித்து மேற்பார்வையிட்டால்தான் கோட்டம் அல்லது சரகம் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவே தான் , களப்பணியின் முக்கியத்துவத்தை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இன்றைய ஆய்வில் குறிப்பிடப்பட்ட மற்றுமொரு முக்கியமான விபரம் தண்டனை விகிதம். புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்தால் மட்டும் நம் கடமை முடிந்துவிடாது. அதனை விரைந்து விசாரித்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே முழுமையாக உங்கள் பணியினை செய்ததாகக் கருதப்படும். அப்போது தான், பொதுமக்களுக்கும் காவல்துறையின் மீது பெரும் மதிப்பு உண்டாகும். இதற்காக நீங்கள் நீதித்துறையுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்தப்படியாக சாலை விபத்துகள். விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோவது பெரும் வேதனைக்குரிய நிகழ்வாகும். எனவே, சாலைப் பாதுகாப்புப் பணிகளில் பொதுமக்களுடன் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை விரிவுபடுத்தி அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் மீண்டும் விபத்து ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இப்பணியில் நீங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும், என்எஸ்எஸ், என்சிசி போன்ற மாணவ அமைப்புகளையும் பெருமளவு ஈடுபடுத்த வேண்டும்
தென்மாவட்டங்களைப் பொருத்தவரை பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய இம்மாவட்டங்களில் இளைஞர்களை போதைப்பொருள் என்ற தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் பெரிய வியாபாரிகளை, போதைப்பொருள் கடத்துபவர்களை நீங்கள் குறிப்பாக கண்டறிந்து கைதுசெய்ய வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும். இதனை காவல்துறை தலைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
இறுதியாக நான் எனது முந்தைய காவல்துறை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததை இங்கும் தெரிவிக்க விரும்புகிறேன். காவல்துறை என்பது ஏழை, எளிய மனிதர்களின் பாதுகாவலனாக அவர்களது உயிருக்கும் உடமைக்கும் எந்நாளும் துணை நிற்பவர்களாக செயல்படவேண்டும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை நினைவில் கொண்டு காவல்நிலையத்திற்கு வரும் எவராக இருந்தாலும், எளியவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்கு உரிய மரியாதையினைத் தந்து அவர்களது குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுங்கள். காவல் நிலையம் என்பது எளிய மனிதர்கள், பெண்கள் சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்கள் என எல்லோரும் எவ்வித தயக்கமும் இன்றி வந்து புகார் அளிக்கக் கூடிய ஒரு இடமாக இருக்கவேண்டும்.
இதற்காக உங்கள் சார்நிலை அலுவலர்களாகிய காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியவர்களுக்கு தக்க அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குங்கள். “காவல் துறை உங்கள் நண்பன்” என்ற சொல்லுக்கேற்ப நாம் செயல்படவேண்டும். சிறப்பான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குற்றங்கள் நிகழ்ந்த பிறகு அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல், புகார் தெரிவிக்க வரும் மக்களிடம் பரிவோடு நடந்து கொள்ளுதல் ஆகியவையே சிறந்த காவல் பணிக்கு இலக்கணமாகும்.
அவற்றை நீங்கள் ஒவ்வொருவரும் மேற்கொண்டு தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் சட்டம் ஒழுங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். உங்கள் சிறப்பான பணிக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சங்கர், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அனீஷ் சேகர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் விசாகன், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா,
தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் மருத்துவர் அபினவ் குமார் இராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவர் துரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் , இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.