பழிவாங்கல், தொழில் போட்டி?: ஆம்ஸ்ட்ராங் படுகொலை பின்னணி?
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பழிவாங்கலும், தொழில் போட்டியுமே காரணமாக இருப்பதாக தெரியவந்துள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொலைக்கான காரணம் தெரியவந்திருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). வழக்கறிஞரான இவர் சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் வீட்டின் அருகே நின்று அவரின் சகோதரர் வீரமணி (65), ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் பாலாஜி (53) உள்பட சிலருடன் இரவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியது.
அதைத் தடுத்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி, பாலாஜி ஆகியோருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. இந்தக் கொடூர தாக்குதலில் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். வீரமணி, பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட தகவலைக் கேள்விப்பட்டதும் பகுஜன் சமாஜ் கட்சியினர் அங்கு குவியத் தொடங்கினர். ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறைக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். அதனால் சென்னை முழுவதும் பதற்றம் நிலவியது. இதையடுத்து சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர் அஸ்ரா கர்க் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அதோடு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு தப்பிய கும்பலையும் பிடிக்க பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் தான் பிரபல ரௌடியான ஆற்காடு சுரேஷின் சகோதரரர் பொன்னை பாலு உள்பட எட்டு பேர் அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து தனிப்படை காவல்துறையினர் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் அதற்கான காரணம் குறித்து விசாரித்தோம். ஆம்ஸ்ட்ராங்குக்கு நெருங்கியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இந்தக் கொலை வழக்கில் கைதாகியிருக்கும் பொன்னை பாலு என்பவர் பிரபல ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆவார். இவரின் தலைமையிலான டீம்தான் இந்தக் கொலையை செய்திருப்பது எங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கும் ஆற்காடு சுரேசுக்கும் என்ன முன்விரோதம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, அ.தி.மு.க பிரமுகர் உள்பட அரக்கோணத்தைச் சேர்ந்த ‘ஒற்றைக்கண்’ ஜெயபால், சைதை சந்துரு, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த யமஹா மணி உள்பட சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆற்காடு சுரேஷை கொலை செய்ய ஒரு பிரபல ரௌடி டீம் கைதானவர்களுக்கு உதவிய தகவல் தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் கிடைக்காததால் அந்த டீமை கைது செய்யவில்லை. இருப்பினும் ரகசியமாக விசாரணை நடத்தியதில் சிலரின் மீது சந்தேகம் எழுந்தது.
அதனால் ரௌடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார், ஆற்காடு சுரேஷ் கொலையில் தொடர்புடையவர்களை விசாரித்து வந்தனர். அப்போதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தரப்பு மீது ஆற்காடு சுரேஷின் டீம் ஆத்திரத்திலிருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர், ஆம்ஸ்ட்ராங் குடியிருக்கும் புளியந்தோப்பு காவல் மாவட்ட உயரதிகாரிகளுக்கு ஒரு குறிப்பு அனுப்பினர்.
அதில் `ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்திருக்கிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்' என அந்த குறிப்பில் குறிப்பிட்டிருந்தது. இந்தச் சூழலில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் எங்களின் சந்தேக பார்வை ஆற்காடு சுரேஷின் டீம் மீதுதான் விழுந்தது. உடனடியாக அவர்களை தேடியபோதுதான் ஆற்காடு சுரேஷின் சகோதரர் உள்பட எட்டு பேர் சரண் அடைந்திருக்கிறார்கள். இவர்களின் பின்னணி, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்கிய ஒரு தங்க நிறுவன விவகாரத்தில் ஆற்காடு சுரேஷ் தலையிட்டிருக்கிறார். அதில் ஆம்ஸ்ட்ராங் தரப்பு ஆற்காடு சுரேஷிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிகிறது. அதுதொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.
கைதானவர்களின் பின்னணியில் சிறையிலிருக்கும் ஒரு பிரபல ரௌடிக்கும் தலைமறைவாக இருக்கும் ஒரு ரௌடிக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.
காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக அவரின் கொலைக்கு அரசியல் பழிவாங்கலா, தொழில் போட்டியா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
ஆனால் ஆம்ஸ்ட்ராங் தரப்பினரோ, ஆற்காடு சுரேசுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் எந்தவித முன்விரோதமும் கிடையாது. அதனால் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் உளவுத்துறையின் தோல்வியால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனால் இந்தத் தோல்விக்கு காரணமாக காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.