இந்திய அரசின் நெல் கொள்முதல் கொள்கையில் மாற்றம் செய்திட பிரதமருக்கு கோரிக்கை
நெல் கொள்முதல் கொள்கையில் மாற்றம் செய்து, நிரந்தர அரசாணை வெளியிட விவசாயிகள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்திய அரசின் நெல் கொள்முதல் கொள்கையில் மாற்றம் செய்து, நிரந்தர அரசாணை வழிகாட்டு நெறிகள் அரசிதழில் வெளியிட விவசாயிகள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
புவி வெப்பமயமாதல் கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பூமத்திய ரேகை செல்லும் பாதைகளுக்கு அருகில் உள்ள நாடுகளில் அடிக்கடி ஏற்படும் பருவநிலை மாற்றத்தால், இந்தியாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களிலும் திடீர் திடீரென, அடிக்கடி இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு பருவம் மாறிய பெருமழை, சூறாவளி, புயல்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இத்தகைய இயற்கை இடர்பாடுகள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டு வருகிறது.
இதுபோன்று அளவுக்கதிகமான பெருமழை ஏற்படுவதை இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனமே முழுமையாக கணிக்க இயலாத நிலையில் பல காலகட்டங்களில் அளவுக்கதிகமான பெருமழை பெய்கிறது. இத்தகைய இயற்கை இடர்பாடுகளுக்கிடையில், நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை அறுவடையின் பொழுதும், சம்பா, தாளடி அறுவடை காலங்களிலும், முதிர்ந்த நெல் பயிர் மழையால் பாதிக்கப்படுவதும் வழக்கமாகிவிட்ட படியால் இந்திய ஒன்றிய அரசு," காரீஃப்., ரபி பருவங்களுக்கான *நெல் மற்றும் கோதுமை கொள்முதல் கொள்கையினை மாற்றி யமைத்து விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
(1) உழவர்கள் பல்வேறு சவால்களுக்கிடையே, மிகுந்த துன்பப்பட்டு, இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு, மழை, காற்றில் உள்ள ஈரப்பதமில்லாமல் நெல்லினை உலர்த்தி, சூரிய ஒளி கிடைத்தால் மட்டுமே இந்திய அரசு நிர்ணயிக்கின்ற தரக்கட்டுப்பாடுகளுடன் நெல்லை கொள்முதல் மையங்களுக்கு கொண்டு வருகிறோம். எந்தவொரு உழவரும் தான் அறுவடை செய்த நெல்லை ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீரில் ஊற வைத்து விற்பதில்லை.
(2) அறுவடை செய்த நெல்மணிகளை தொடர் மழை காலங்களில், எங்கே சென்று காய வைத்து விட முடியும்? வெயில் கிடைத்தால் எப்படியாவது நெடுஞ்சாலை ஓரங்களிலாவது காய வைத்து, நன்கு உலர்த்தி ஈரமில்லாமல் எங்களால் இயன்றவரை முயற்சித்து நல்ல நெல்லைத்தான் தந்து வருகிறோம்.
(3) எனவே புவி வெப்பமாதல் நிகழ்வு முடியும் வரை, உழவன் உற்பத்தி செய்த நெல்லை எவ்வித நிபந்தனையுமில்லாமல், *ஈரப்பதம் 30% வரை* அனுமதித்து, *ஈரப்பத தரவெட்டு இல்லாமல்*, கொள்முதல் செய்யப்படுவதற்கு இந்திய அரசு *நெல் கொள்முதல் கொள்கையில் மாற்றம் செய்து அரசாணை* வெளியிடுவதோடு, இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், நிரந்தர உலர் இயந்திரங்கள் அமைக்கப்பட வேண்டும்.
(4) ஒவ்வொரு கிராமத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த, அரசிற்கு சொந்தமான தானிய உலர்களங்க ளெல்லாம் நாளடைவில் தனியாரால் ஆக்கிரமிப்பில் உள்ளன, அவற்றை மீட்டெடுத்து அவைகளை சிமெண்ட் கான்கிரீட் உலர் களங்களாக "நபார்டு" நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட வேண்டும்.
(5) வருகின்ற சம்பா, தாளடி அறுவடை காலங்களின் போதும், பெருமழை, பருவம் தவறிய மழைக்கு வாய்ப்பிருப்பதால், நெல், கோதுமை கொள்முதல் கொள்கையினை மாற்றி அமைத்து அரசாணை வெளியிட வேண்டுகிறேன்.
(6) இது குறித்து நான் ஏற்கெனவே 18/7/2022 அன்று தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சரிடம், குறுவை கொள்முதல் குறித்த நேரடி கருத்துக்கேப்புக் கூட்டத்தில் கோரிக்கைகள், ஆலோசனைகள் அளித்துள்ளேன். எனவே இக்கோரிக்கைக்கு மாண்புமிகு பிரதமர்" 'மான் கீ பாத்' நிகழ்ச்சியில் தீர்வளிக்க முன்வர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.