நாளை ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்குமா? மாநிலம் முழுவதும் பிரச்னைக்குரியவர்கள் கைது

நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்த திட்டமிட்டு, மாநிலம் முழுவதும் பிரச்னைக்கு உரிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-02-18 02:37 GMT

நாளை மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கும் வழக்கம் போல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்யாமல், தேர்தல் ஆணையமும், போலீஸ் நிர்வாகமும் சற்று கூடுதல் ஏற்பாடுகளை செய்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரச்னைக்குரிய நபர்களை கண்டறிந்து மாநிலம் முழுவதும் பல ஆயிரம் பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை ஒருவித பதட்டம் நிலவுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணம் புழங்கியதே இதற்கு காரணம். ஏற்கனவே கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக அடிவாங்கிய பல ஆயிரம் பேர், கடன் வாங்கி இந்த தேர்தலில் செலவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த செலவு கணக்கு எல்லாவற்றையும் விட பல ஆயிரம் மடங்கு அதிகம் செலவு செய்துள்ளனர். லட்சங்கள் எல்லாம் சிறிய தொகை என்பது போன்ற ஒரு சூழல் உருவாகும் அளவுக்கு செலவு செய்துள்ளனர். பல வேட்பாளர்களின் உண்மையான செலவு கோடிகளை கடந்துள்ளது என்பது தீர்க்கமான உண்மை.

இதனால் 'வென்றால் மன்னன், தோற்றால் நாடோடி' என்ற நிலையே அறுதிப்பெரும்பான்மையான வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் நிலையாக உள்ளது. பல ஆயிரம் வேட்பாளர்களின் நிலை தேர்தலில் தோற்றால் கேள்விக்குறியாகி விடும். எனவே அத்தனை பேரும் வெற்றியை நோக்கியே பயணிக்கின்றனர்.

இதற்காக பலரும் தங்கள் வரம்புகளை மீறி வருகின்றனர். இது நாளை நடக்கும் ஒட்டுப்பதிவில் பிரச்னையாகி விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையமும், போலீஸ் நிர்வாகமும் கூடுதல் கவனத்துடன் செயல்படுகின்றன. எது எப்படியோ நாளை ஓட்டுப்பதிவு பிரச்னையின்றி முடிந்தால் மட்டுமே போலீஸ் நிர்வாகத்தால் நிம்மதியாக இருக்க முடியும்.

Tags:    

Similar News