தலைமையின் அறிவிப்பை மீறிய நகராட்சி தலைவர் -பின்வாங்கும் கட்சித் தலைமை : காரணம் இதுதான்
நகராட்சி தலைவர் பதவியை பெற்றுத்தருவதில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள நாயுடு சமூகத்தை சேர்ந்த விஐபி.,க்கள் முழுமையாக தலையிட்டுள்ளனர்;
தலைப்பை படித்ததும், மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் என பொத்தாம் பொதுவாக விமர்சிக்காதீர்கள். இது தான் உண்மை. தி.மு.க., தலைமையின் அறிவிப்பை மீறி தேனிநகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றிய ரேணுப்பிரியாவும், அவரது கணவர் பாலமுருகனும் (தி.மு.க., தேனி நகர செயலாளர்) தன் நிலையில் இருந்து சற்றும் பின்வாங்கவில்லை. பேச்சு வார்த்தை நடத்தியே தி.மு.க., தலைமையும், காங்., தலைமையும் சேர்ந்து விட்டது.
தவிர யாரும் அறியாத வகையில் இந்த பேச்சு வார்த்தைக்கு இடையே பல கோடி ரூபாய் பணமும் விளையாடி உள்ளது. இதன் பின்னணி தகவல்கள் சுவாராஸ்யமானவை. பாலமுருகன், ரேணுப்பிரியா பாலமுருகன் இருவரும் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள். எதிர் அணியில் களம் இறங்கி உள்ள காங்., வேட்பாளர் சற்குணமும் நாயுடு சமூகம் தான். ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள நாயுடு சமூக வி.ஐ.பி.,க்கள் பாலமுருகனுக்கு முழு அளவில் சப்-போர்ட் செய்து வருகின்றனர்.
காரணம் பாலமுருகன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவர். எந்த வேலையும் அவரிடம் ஒப்படைக்கலாம். அதீத எதிர்ப்பு குணம் இல்லாதவர். ஆனால் காங்., வேட்பாளர் சற்குணமும், அவரது மகன் டாக்டர் தியாகராஜனும் எப்போதுமே தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் இருப்பார்கள். தவிர இவர்களிடம் எப்போதும் ஆளுமை குணமே நிறைந்திருக்கும். நாம் தான் மேலே, மற்ற அனைத்தும் நமக்கு கீழே என்ற நிலையில் தான் இது வரை வாழ்ந்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த நாயுடு சமூகத்தின் வி.ஐ.பி.,க்களும் மாநிலம் முழுவதும், பிற மாநிலங்களில் உள்ள தங்கள் சமூக வி.ஐ.பி.,க்களை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தில் தலையிட வைத்ததற்கு இது மட்டுமே முக்கிய காரணம். தவிர தேனி நகராட்சியில் தலைவர் பதவி முதன்முறையாக நாயுடு சமூகத்திற்கு தேடி வந்துள்ளது. இந்த வாய்ப்பினை விட்டுத்தர நாயுடு சமூக மக்கள் தயாராக இல்லை.
தற்போது தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுத்தாலும், முதல்வர் ஸ்டாலின் வரை பாலமுருகனுக்காக நேரடியாக பேச இந்த சமூகத்தில் வி.ஐ.பி.,க்கள் உண்டு என்பதும் ஊரறிந்த ரகசியம். இன்னொரு விஷயம் ஸ்டாலின் விடாப்பிடியாக இருந்தாலும் நேரடியாக ராகுலிடம் பேசவும் இந்த சமூகத்தில் ஆள் உண்டு. குறிப்பாக தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் இந்த விஷயத்தில் பாலமுருகனுக்கு ஆதரவாக நேரடியாகவே களம் இறங்கி உள்ளார். அதேபோல் பாலமுருகனுக்கு செலவுக்கு தேவையான பணத்தையும் அள்ளிக் கொடுத்துள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தையில் பல கோடி ரூபாய் பணம் விளையாடியதும் மறுக்க முடியாத உண்மை. இப்படி எதிர்பாராத விதமாக பாலமுருகனுக்கு கிடைத்த ஆதரவு டாக்டர் தியாகராஜனை ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தி உள்ளது. இதனை விட மிகப்பெரிய விஷயம், தேனியில் வெற்றி பெற்ற தி.மு.க., கவுன்சிலர்களும் இந்த நிமிடம் வரை பாலமுருகனுக்கு ஆதரவாகவே வலுவுடன் நிற்பதால், தேனி மாவட்ட தி.மு.க., தலைமையும், காங்., தலைமையும் பேச்சு வார்த்தையில் இருந்தே பின்வாங்கி விட்டது என்று கூறலாம். பாலமுருகன் ராஜினாமா இல்லை என திட்டவட்டமாக அறிவிக்க இதுவே முக்கிய காரணம்.