நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சமரசம் ஆக கூடாது: கலெக்டர் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சமரசம் ஆக கூடாது என அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலெக்டர் கூறினார்;

Update: 2022-03-16 14:11 GMT

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மற்றும் சட்டம், ஒழுங்கு, சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பல்வேறு துறைகளில் நீண்டகால உடனடி தீர்வு காண சமரசம் ஏற்பட கூடிய வழக்குகளை லோக் அதாலத்தின் போது தீர்வு காண வேண்டும். குறிப்பாக வருவாய்த்துறையின் மூலம் வாரிசு சான்றிதழ் வேண்டி நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வேண்டும். அனைத்து துறைகளும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வரை வழக்குகளைத் அலுவலர்கள் கொண்டு செல்ல வேண்டாம்.

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் எவ்வித சமரசத்திற்கும் இடம் அளிக்காமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். குடியிருப்புகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி அவர்கள் அந்த இடத்தில் குடிபெயர அறிவுரைகள் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

குடியிருப்பு வாசிகளுக்கு முறையாக தகவல் தெரிவித்தும், சமாதானக் கூட்டம் நடத்தியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

அதேபோன்று ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டப் பணிகள் நிலவரங்கள் குறித்து விவரங்கள் அளிக்க வேண்டும்.

மேலும் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் கீழ் கிராமப் பகுதியில் 5 வருடங்களுக்கு மேல் வேளாண்மை செய்யாத தரிசு நிலங்கள் உள்ள இடங்களை கண்டறிந்து, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் ஊரக வளர்ச்சி துறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத் துறை, முன்னோடி வங்கிகள் போன்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து இந்த நிலங்களில் விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்கிட ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை முன்னெடுக்கும் பணியினை வேளாண் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

அதற்கான அறிக்கையை அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவர் அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News