நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடமாடும் வாகனகள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குவதாக கலெக்டர் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் சென்று தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது,
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குறு வட்ட அளவிலும் ஒரு நடமாடும் வாகனங்கள் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த வாகனங்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் குறித்த தகவல்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று வார்டு வாரியாகவும், கிராம ஊராட்சி வாரியாகவும் தடுப்பூசி செலுத்திட வேண்டும். இப்பணிகள் நாளை (28.9.21) முதல் நடைபெறும். இப்பணிகளை வட்டாட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். இதற்கு முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
எந்த இடத்தில் தடுப்பூசி முகாம் அமைப்பது என்பது குறித்து வட்டாட்சியர்கள் முடிவு செய்து வாகனங்களை இயக்க வேண்டும். அதேபோல நகர மற்றும் ஊரக பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், பெரிய வணிக நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
குடியிருப்புகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பொழுது தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்த பின்னர் தடுப்பூசி செலுத்தவேண்டும். உடல் உபாதைகள், தீராத நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி முறையான மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னரே செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் தடுப்பூசி முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாம் தவணைக்காக உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழிற்சாலைகள் வாரியாகவும் தடுப்பூசி முகாம் அமைத்திட நடமாடும் வாகனங்களும் வழங்கப்பட உள்ளது.
இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர், உதவி ஆணையர், தொழிலாளர் துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 100 சதவீதம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் என்ற நிலையினை அடைய ஒவ்வொரு அலுவலரும் முறையான புள்ளி விவரங்களை சேகரித்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.