குழந்தை திருமணம் நடப்பதை கண்காணித்து தடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்;
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை பேசியதாவது
வாரம் தோறும் நடைபெறும் இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறைகளில் மற்ற துறைகளில் இருந்து கிடைக்க வேண்டிய அனுமதிகள், பிரச்சனைகளை தீர்வு காண்பது குறித்து கலந்து ஆலோசித்து கொள்ள இக்கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பல்வேறு துறைகளில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனை தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் நீதிமன்ற வழக்குகள் அனைத்து துறைகளும் அறிக்கை அளிக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளை விரைவாக முடித்தால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள், குழந்தை திருமணங்கள் தடுத்தல் இவற்றைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறைகள் அப்பகுதிகளில் சென்று ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான குழு கூட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் உதவி கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு குழந்தை திருமணங்கள் நடப்பதை தவிர்க்கவும், அதேபோன்று பள்ளி செல்லா குழந்தைகள் எவ்வளவு என்பதை கணக்கெடுத்து அதற்கு பின்னர் எடுத்த நடவடிக்கை விவரம் கணக்கெடுக்க வேண்டும் என்று கூறினார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.